வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (11/03/2018)

கடைசி தொடர்பு:01:00 (11/03/2018)

தமிழக அரசின் எச்சரிக்கையால் கடலுக்கு செல்வதை தவிர்த்த குமரி மீனவர்கள்!

மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என இந்திய கடல் முன்னறிவிப்பு மையம் வெளியிட்ட எச்சரிக்கையைத் தொடர்ந்து நெல்லை, குமரி மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்குச் செல்லவில்லை. 

மீனவர்கள் படகுகள்

குமரி அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடாவில் அடுத்த 2 நாட்களுக்கு கடலில் பலத்த காற்று வீசக்கூடும். கடலில் 35 முதல் 55 கி.மீ. வரை காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சில இடங்களில் மழை பெய்ய கூடும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதனால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று இந்திய கடல் முன்னறிவிப்பு மையம் மற்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஏற்கெனவே ஒகி புயல் ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து குமரி மாவட்ட மீனவர்கள் இன்னும் முழுமையாக மீளாத நிலையில், இந்த எச்சரிக்கையால் மிகுந்த அச்சம் அடைந்தனர். அதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் நேற்று கடலுக்குச் செல்லவில்லை. அதே போல குமரி மாவட்ட மீனவர்களும் கடலுக்குச் செல்வதை தவிர்த்து விட்டு ஓய்வெடுத்ததுடன், வலைகளைச் செப்பணிடுதல் போன்ற பணிகளைச் செய்தனர்.

குமரி மாவட்டத்தில், மணக்குடி, ராஜாக்கமங்கலம் துறை, குளச்சல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால் அவர்களின் படகுகள் கடலோரப் பகுதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. குமரி மாவட்ட கடலோரப் பகுதிகளில் சில இடங்களில் வெப்பத்தின் தாக்கம் தணிந்து காணப்பட்டது. இதற்கிடையே 11-ம் தேதியும் மீனவர்கள்  கடலுக்குச் செல்ல வேண்டாம் என தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.