வெளியிடப்பட்ட நேரம்: 02:30 (11/03/2018)

கடைசி தொடர்பு:02:30 (11/03/2018)

'மணல் எடுக்கப்போகிறார்கள் யாரும் பிடிக்கக்கூடாது'- போலீஸிடம் கறார் காட்டிய அ.தி.மு.க. எம்.பி.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் மணல் கொள்ளையில் ஈடுபடுவதாகப் புகார் எழுந்துள்ளது. 

திருவள்ளூர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளராக இருப்பவர் திருத்தணி அரி. இவர் தற்போது அரக்கோணம் எம்.பி.யாக இருந்து வருகிறார். இவர் திருத்தணி சித்தூர் சாலையில் உள்ள செங்குந்தர் நகரில் 2 கிரவுண்டில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளார். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்டத்தில்  மணல் தட்டுப்பாடு அதிகம் உள்ள நிலையில் இவருக்கு மட்டும் மணல் எளிதில் கிடைத்து விடுவதாகக் கூறப்படுகிறது. 

அரக்கோணம் எம்.பி. அரிதிருத்தணியில் போலீஸாருடன் கூட்டு வைத்து கொண்டு மணல் திருட்டில் ஈடுபட்டு வரும்  அ.தி.மு.க. ஒன்றிய இளைஞரணி செயலாளர் வேலஞ்சேரி  பழனி அ.தி.மு.கவை ச்சேர்ந்த பலராமன், தி.மு.கவைச் சேர்ந்த வி.சி.என். பாபு மற்றும் கார்த்திகாபுரம் வரதன் ஆகியோர் கடந்த ஒரு வாரமாக நல்லாட்டுரில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் 100 லோடு மணலுக்கு மேல் திருடி உள்ளனர். அதில் 30 லோடுக்கு மேல் அதாவது ரூ.12 லட்சம் மதிப்புள்ள மணலை, எம்.பி. அரிக்காகத் திருடியுள்ளனர்.  அந்த மணலை அவர் வீடு கட்டும் இடத்தில் குவித்து வைத்துள்ளனர். மணல் திருடுவதற்கு முன்பாக திருத்தணி போலிஸ் இன்பெக்டர் விநாயகத்திடம் தகவல் சொல்லி உள்ளனர். அவர் எல்லா போலீஸ்காரரர்களையும் அழைத்து எம்.பி. வீட்டுக்கு மணல் எடுக்க போகிறார்கள் யாரும் பிடிக்கக்கூடாது என்று உத்தரவிட்டதாகத் தெரிகிறது. ஆளும் கட்சி எம்.பி. திருத்தணியில் மணல் திருடியது தான் தற்போது பரவலாக பேசப்படுகிறது.

இதுகுறித்து விளக்கம் கேட்பதற்காக எம்.பி. அரியைத் தொடர்பு கொண்டோம். நீண்ட முயற்சிக்குப் பின்னர் நமது கேள்விகளுக்குப் பதிலளித்த  எம்.பி. அரி, ``நான் வீடு கட்டி வருவது உண்மைதான். அதற்குத் தேவையான மணலைக் காட்பாடியிலிருந்து வாங்குகிறேன்’’ என்றார். அதற்கு முறையான ரசீதுகள் இருக்கிறதா என்று நாம் கேள்வி எழுப்பினோம். அதற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த அவர், ``அதையெல்லாம் நான் கவனிப்பதில்லைங்க; மணலை எடுத்து வருகிறார்கள். அதற்கான பணத்தை நான் கொடுத்தனுப்புகிறேன். அவ்வளவுதான்’ என்றார் அலட்சியமாக. உங்கள் பெயரைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக மணல் கொள்ளையடிக்கப்படுவது குறித்த கேள்வியை நாம் முன்வைத்தோம். அதற்கு, ``அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லீங்க. மாட்டு வண்டியில் மணல் கடத்தப்பட்டால் கூட போலீஸார் பிடித்து விடுகின்றனர். ஆதாரமில்லாமல் சிலர் குற்றம்சாட்டுகின்றனர்’ என்று முடித்துக் கொண்டார்.