"அந்த அஞ்சு பைசாவுக்கு ஒத்தகாசு மிட்டாய் ஆறு குடுப்பாங்க!" - நாணயவியல் கண்காட்சியில் ருசிகரம்

புதுக்கோட்டை நாணவியல் கழகம் மற்றும்  முக்கண்ணாமலைப்பட்டி மெஜஸ்டிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இணைந்து, உலக பணத்தாள்கள் மற்றும் நாணயவியல் கண்காட்சியை பள்ளி வளாகத்தில் நடத்தியது.

நாணயவியல் கண்காட்சி


புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகில் உள்ள முக்கண்ணாமலைப்பட்டியில் பள்ளி மாணவர்கள் நாணயவியல் வரலாற்றையும் அதன் முக்கியத்துவத்தையும் அறிந்துகொள்ளும் விதமாக நாணயவியல் மற்றும் பணம் குறித்தக் கண்காட்சி நடத்தப்பட்டது. இந்த கண்காட்சி புவியியல் அடிப்படையில் ஆசிய கண்டத்திலுள்ள 50 நாடுகள் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள 54 நாடுகள் அமெரிக்க கண்டத்தில் உள்ள 23 நாடுகள் ஆஸ்திரேலிய மற்றும் ஐரோப்பா கண்டத்தில் உள்ள சுமார் 62-க்கும் மேற்பட்ட நாடுகளின் பணத்தாள்களும் நாணயங்களும் இடம் பெற்றிருந்தன. இதில் வில்லியம், ராணி விக்டோரியா, எட்வர்டு, 5 மற்றும் 6-ம் ஜார்ஜ் ஆகியோர்களின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்களும் அணாபைசா, செம்பு, வெள்ளி, நிக்கல், பித்தளை, உள்ளிட்ட உலோகங்களில் செய்யப்பட்ட வட்டம், அறுகோண, வடிவிலனான நாணயங்களும்  காட்சி படுத்தப்பட்டன. இதேபோல் விநாயகர் படம் போட்ட  இந்தோனேசியா ரூபாய் நோட்டுகளும், இலங்கை, மொரிஷியஸ், சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த தமிழில் எழுதப்பட்ட பணத்தாள்களும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது. மேலும் அச்சுப்பிழை கொண்ட ரூபாய் நோட்டுக்களும் காட்சிக்கு வைக்கப்பட்டது.

நாணயவியல் கண்காட்சி

இந்த கண்காட்சியை பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்களும், பெற்றோர்களும், பொதுமக்களும் ஆர்வமுடன் வந்து பார்வையிட்டனர். அப்போது, மாணவர்கள் மத்தியில் பேசிய  நாற்பது வயதுக்கும் மேற்பட்ட பல பெண்கள் தாங்கள் சிறுவயதில் அடம்பிடித்து அழுது, ஒரு பைசா, இரண்டு பைசா, அஞ்சு காசு போன்றவற்றை வாங்கிச் சென்று ஒத்தகாசுமிட்டாய் வாங்கி சாப்பிட்டதை சிலிர்ப்புடன் சொல்லி மகிழ்ந்தார்கள். இங்கு காட்சிப்படுத்தப்பட்ட நாணயங்களை பார்த்ததும் பழைய நினைவுகளில் முகம் பூரித்த பலரையும் பார்க்க முடிந்தது. இந்த நிகழ்வில், நாணயங்கள் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்து வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை புதுக்கோட்டை நாணயவியல் கழக தலைவர் பசீர் அலி செய்திருந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!