வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (11/03/2018)

கடைசி தொடர்பு:04:00 (11/03/2018)

இது இன்றைய ஸ்பெஷல்; கமல் பாணியில் ராமநாதபுரத்தில் துவக்கப்பட்ட புதிய அரசியல் கட்சி!

கடந்த மாதம் நடிகர் கமல்ஹாசன் ராமேஸ்வரதிலிருந்து தனது அரசியல் பயணத்தை துவக்கினார். அதேபாணியில் ராமநாதபுரத்தில் ''தமிழக எழுச்சிக் கழகம்'' என்னும் புதிய அரசியல் கட்சி ஒன்று நேற்று துவக்கப்பட்டது.

தமிழக எழுச்சிக் கழகம்

ராமநாதபுரம் அரண்மனை முன்பு நடந்த 'தமிழக எழுச்சிக் கழகம்' புதிய கட்சி துவக்க விழாவிற்கு மாநிலத் துணைத் தலைவர் அமுதாசுரேஷ் தலைமை வகித்தார். மாநிலத் துணைச் செயலாளர் ஜெ.ஹலீமா முன்னிலை வகித்தார். புதிய கட்சியின் பெயரையும், கொடியையும் அறிமுகம் செய்து வைத்து அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வி.ராஜேந்திரன் கூறுகையில், ''கட்சிக் கொடியிலிருக்கும் ஊதா நிறம் நீர்நிலைகளைப் பாதுகாக்கவும், வெண்மை நிறம் நேர்மையை வெளிப்படுத்தவும், பச்சை நிறம் விவசாயத்தையும் குறிக்கும். கட்சியில் சிவப்பு நிறம் தியாகத்துக்கும் அச்சிவப்பு நிறத்தில் உள்ள கதிர் விவசாயத்தையும், புத்தகம் கல்வியையும், மருத்துவரின் ஸ்டெதாஸ் கோப் மனிதர்களின் ஆரோக்கியத்தையும் நினைவுபடுத்துவதாகும். இவையனைத்தையும் நல்ல முறையில் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும், கட்சியின் கொடியில் நடுவில் உள்ள கையில் தாமரை மலர்வது போன்ற சின்னம் ஒற்றுமையையும் மேம்படுத்த வேண்டும் என்பதற்காக சேர்க்கப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்தார். விழாவில் மாநிலத் தலைவர் கே.புஷ்பநாராயணன், மாநில செயலாளர் பஷீர்அலி, வழக்குரைஞர்.ராஜேஸ்வரி ஆகியோர் கட்சி தொடங்கியதன் நோக்கம் மற்றும் தங்கள் கட்சியின் கொள்கைகளாக விவசாயத்தை பாதுகாக்க நதிநீர் இணைப்பு, தனியார் பள்ளிகளை அரசுடமை ஆக்குவது, புதிய கல்வி கொள்கை ஏற்படுத்துவது உள்ளிட்டவை அடங்கியுள்ளதாக தெரிவித்தனர். முடிவில் கட்சியின் மாவட்டத் தலைவர் ஜி.முத்துக்குமார் நன்றி கூறினார்.