'களக்காடு பகுதிக்கு கல்லூரி வேண்டும்' - வசந்தகுமார் வலியுறுத்தல்!

நெல்லை மாவட்டம் களக்காடு நகரத்தில் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தரிடம் வசந்தகுமார் எம்.எல்.ஏ வலியுறுத்தினார்.

வசந்தகுமார்

நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட மக்களின் கல்விக்காக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக் கழகத்தின் கீழ் மொத்தம் 10 உறுப்புக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் மட்டும் சுமார் 7,000 மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். மிகவும் பின் தங்கிய மக்கள் வசிக்கும் பகுதிகளில் கல்வி வாயப்பைக் கொடுக்கும் வகையில் பல்கலைக் கழகத்தின் சார்பாக மனோ கல்லூரிகளும் உறுப்புக் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. 

இந்த நிலையில், நெல்லை மாவட்டம் களக்காடு நகரத்தில் மனோ கல்லூரியைத் தொடங்க நடவடிக்கை எடுக்குமாறு நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினரான ஹச்.வசந்தகுமார் வலியுறுத்தி உள்ளார். பல்கலைக் கழகத்தின் செனட் கூட்டத்தில் பங்கேற்ற அவர், துணைவேந்தர் பாஸ்கரிடம் இது தொடர்பாக கோரிக்கை மனுவை அளித்தார். அந்த மனுவில், ’’நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட களக்காடு பேருராட்சியில் நிறைய பள்ளிகள் உள்ளன. ஆனால், இந்தப் பகுதி மாணவர்கள் உயர் கல்விக்காக கல்லூரிகளுக்குச் செல்வதற்கு நெல்லைக்குச் செல்ல வேண்டியதிருக்கிறது.

இந்தப் பகுதியில் ஏழை, எளிய விவசாய மக்கள் வசிப்பதால், தங்கள் குழந்தைகளை கல்லூரிப் படிப்புக்காக நெல்லைக்கு அனுப்பத் தயங்குகிறார்கள். அதனால், இந்தப் பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகளின் கல்வியானது கனவாக மாறி வருகிறது. அதனால், பின் தங்கிய இந்தப் பகுதி மாணவ, மாணவிகளுக்கு கல்வி வாய்ப்பை உருவாகித் தரும் வகையில், மனோ கல்லூரி அமைத்துக் கொடுக்க வேண்டும்’’ என வலியுறுத்தினார். இது தொடர்பாக் உரிய நடவடிக்கை எடுப்பதாக பல்கலைக் கழக துணைவேந்தர் பாஸ்கர் உறுதியளித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!