'எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து முதல்வர் இருக்கையை ஏக்கத்துடன் பார்க்கிறார்' - ஸ்டாலினை சீண்டும் கடம்பூர் ராஜு!

"ஸ்டாலினுக்கு முதல்வர் கனவு தெளியவில்லை. தினகரனுக்கு அரசியல் புரியவில்லை" என தமிழக செய்தித்தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

கடம்பூர் ராஜூ

துாத்துக்குடி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பின், செய்தியாளர்களைச் சந்தித்த கடம்பூர் ராஜூ, "பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் தமிழக போலீஸார் சிறப்பாக செயல்படுகின்றனர். இதனைத் தெரிந்து கொள்ள, தமிழிசை, மற்ற மாநிலங்களுக்கு சென்று பார்வையிட வேண்டும். திருச்சியில் நடந்தது ஒரு எதிர்பாராத விபத்து. சட்ட ஒழுங்கை பாதுகாப்பதில், காவலர் தவறு செய்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிகிறது.

டெல்லியில் நடந்த விழாவில் சிறந்த காவல் துறைக்கான முதல் பரிசினை கோவை காவல்துறையினர் வாங்கியிருக்கின்றனர். தமிழிசை ஒரு அரசியலுக்காக அப்படி பேசுகிறார். திருச்செந்துார் கோவில் என்ன நடந்தது என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். விசாரணை முடிந்து யார் மீது தவறு என்றாலும் பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும்.

ஸ்டாலின், கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராகி விடலாம் என்ற கனவுடன் இருந்தார். அவரது கனவு பலிக்கவில்லை. மக்கள் அ.தி.மு.க-விற்கு ஆளும் பொறுப்பினையும், திமுகவிற்கு எதிர்கட்சி அந்தஸ்தனையும் வழங்கினர். சட்டமன்றத்தில் எதிர்கட்சி வரிசையில் அமர்ந்து கொண்டு முதல்வர் இருக்கை ஏக்கத்துடன் பார்த்து கொண்டு இருக்கிறார். வாழ்நாளில் ஒரு முறையாவது முதல்வராகிவிட வேண்டும் என்று கனவுடன் இருக்கிறார் அவர். இனி அ.தி.மு.க., பற்றி பேச தினகரனுக்கு தார்மீக உரிமை கிடையாது.  இப்போது இரட்டை இலை மீட்போம் என்று கூறுவது, அவருக்கு அரசியல் தெரியவில்லை என்று தான் அர்த்தம்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!