வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (11/03/2018)

கடைசி தொடர்பு:03:00 (11/03/2018)

கடன் பிரச்னை காரணமாக பனியன் கம்பெனி மேனேஜர் தற்கொலை - திருப்பூரில் சோகம்!

கடன் பிரச்னை காரணமாக, திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தின் மேலாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொழிற்துறையினரிடையே பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

தற்கொலை

திருப்பூர் அம்மாபாளையம் குமரன் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பழனிநாதன். இவர் கோவையை சேர்ந்த சுதிலும்பா என்பவருக்கு சொந்தமான பின்னலாடை நிறுவனமொன்றில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மேனேஜராக பணியாற்றி வந்திருக்கிறார். இந்நிலையில் முதலாளி சுதிலும்பா, தன்னுடைய மேனேஜர் பழனிநாதனின் பெயரைப் பயன்படுத்தி மற்றுமொரு நிறுவனத்தை நடத்தி வந்ததாக தெரிகிறது. அந்த நிறுவனம் சமீபகாலமாக தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வந்ததால், சில வர்த்தகர்களும், கடன் கொடுத்த நபர்களும் பழனிநாதனை தொடர்புகொண்டு பணம் கேட்டிருக்கிறார்கள். இதனால் தொடர் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்த பழனிநாதன், இதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும், சூழ்நிலை குறித்து தன் முதலாளி சுதிலும்பாவிடம் தெரியப்படுத்துவதாகவும் கூறியிருக்கிறார். ஆனால் வர்த்தகர்கள் காவல் நிலையத்தை அணுகி பழனிநாதன் மீது புகார் அளித்துவிட்டனர்.

எனவே மனமுடைந்த பழனிநாதன், தனக்கு எவ்வாறு பிரச்னை ஏற்பட்டுள்ளது என்ற தகவலை வாட்ஸ்-அப்பில் தன்னுடைய நண்பர்களுக்கு அனுப்பிவிட்டு, பின்னலாடை நிறுவனத்திலேயே தூக்குப் போட்டு இறந்துள்ளார். பின்னர் தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு வந்து பழனிநாதனின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் தற்கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தற்போது விசாரணையும் நடத்தி வருகின்றனர்.