வெளியிடப்பட்ட நேரம்: 01:30 (11/03/2018)

கடைசி தொடர்பு:01:30 (11/03/2018)

''நன்னாரி சர்பத் உள்பட 46 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி குறைப்பு..!'' டெல்லியில் அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை

''பிஸ்கட்கள், தீப்பெட்டிகள், வெண்ணெய், நெய், சிப்ஸ், மிக்சர், முறுக்கு வகைகள் மற்றும் வத்தல், ரஸ்க், நன்னாரி சர்பத், கற்பூரம், மாற்றுத்திறனாளிகளால் பயன்படுத்தப்படும் பொருட்கள், கொத்தமல்லி, காய்ந்த மிளகாய், சுக்கு, மிளகு, மஞ்சள், மிளகாய், கடுகு கொண்டு தயாரிக்கப்படும் மசாலா பொருட்கள் உள்பட 46 பொருட்களுக்கு வரிவிலக்கு மற்றும் வரிக்குறைப்பு செய்யப்பட வேண்டும்'' என்று டெல்லியில் நடந்த ஜி.எஸ்.டி கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை வைத்தார். புதுடெல்லியில், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் 10.03.2018 அன்று நடைபெற்ற 26-வது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்ற கூட்டத்தில் மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். 

அருண் ஜெட்லி ஜெயக்குமார்

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில், ''ஜி.எஸ்.டி. சட்டம் என்பது சேரிடம் சார்ந்த வரி முறையாகும். ஆகையால், தமிழ்நாடு போன்ற உற்பத்தி மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி சட்டத்தின்கீழ் வருவாய் இழப்பு ஏற்படக்கூடும் என்ற அச்சம் ஆரம்ப கட்டத்தில் இருந்தது. ஆகையால் தான், ஜி.எஸ்.டி. அமலாக்கத்தின்போது ஏற்படக்கூடிய வருவாய் இழப்பினை மத்திய அரசு 5 வருட காலத்திற்கு 14 சதவீத வளர்ச்சி வீதத்தில் ஈடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு வலியுறுத்தியது. ஜி.எஸ்.டி. அமலாக்கத்திற்கு பின்பு மாநிலம் எதிர்ப்பார்த்ததைவிட ஜி.எஸ்.டி. சட்டத்தில் வரி வசூல் திடமாக உள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ரூ.14,305.08 கோடி மாநில சரக்குகள் மற்றும் சேவைகள் வரியாக இதுவரை வசூலிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இடைமாநில வர்த்தகப் பரிவர்த்தனைகள் மூலமாக ரூ.6,346.94 கோடி தமிழ்நாட்டிற்கு மத்திய அரசால் தீர்வைச் செய்யப்பட்டுள்ளது. இவை தவிர, மத்திய அரசிடமிருந்து பிப்ரவரி, 2018-ம் ஆண்டு முடிய சரக்குகள் மற்றும் சேவைகள் வரி இழப்பீட்டு தொகையாக ரூ.632 கோடி பெறப்பட்டுள்ளது. இடைமாநில வர்த்தகப் பரிவர்த்தனைகள் மூலமாக தமிழ்நாட்டிற்கு தீர்வு செய்ய வேண்டிய தொகையில் ரூ.1,304 கோடி முன்பணமாகவும் மத்திய அரசிடமிருந்து வரப் பெற்றுள்ளது. மீதமுள்ள நிலுவைத் தொகையினையும் 31.03.2018-க்குள் தீர்வை செய்யப்பட வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் இன்றைய கூட்டத்தில் வலியுறுத்தினார்.

ஜி.எஸ்.டி. சட்டத்தின் கீழ் வணிகர்கள் தாக்கல் செய்ய வேண்டிய கணக்கு விவர அறிக்கைகளை மேலும் எளிமைப்படுத்திடவும், ஏற்றுமதியாளர்களுக்கு தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வரும் வரிவிலக்கு முறையினை தொடர்ந்திட மற்றும் இறக்குமதியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தற்காலிக வரிவிலக்கு தொடர்பாக நடைமுறையினை வகுத்திடவும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு உரிய முடிவுகள் எடுக்கப்பட்டன. ஜி.எஸ்.டி. சட்டத்தின் கீழ் “Reverse Charge Mechanism” எனப்படும் வரி செலுத்தும் முறையானது 31.3.2018 வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இன்றைய கூட்டத்தில் இந்த காலக்கெடுவினை மேலும் 6 மாதங்களுக்கு அதாவது 30.9.2018 வரை தள்ளி வைப்பதென மன்றம் முடிவு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் இடைமாநில மற்றும் உள்மாநில வர்த்தகத்தின் போது, “e-Way Bill” எனப்படும் மின்னணுவியல் மூலமாக சரக்குகளின் போக்குவரத்து தொடர்பான தகவல்களை வழங்கும் முறையானது 1.2.2018 முதல் அமல்படுத்தப்பட்டது. எனினும், GSTN வலைதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக இது தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இன்றைய கூட்டத்தில் “e-Way Bill” முறையினை இடைமாநில வர்த்தகத்தின்போது 1.4.2018 முதல் அமல்படுத்தலாம் என்றும் உள்மாநில வர்த்தகத்தைப் பொறுத்தவரை குறிப்பிட்ட மாநிலங்கள் வாரியாக அமல்படுத்தலாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

நன்னாரி சர்பத்

ஜி.எஸ்.டி. சட்டத்தின் கீழ் வரி செலுத்துவோர்க்கு ஏற்படக்கூடிய சிரமங்களை களைவதற்கு ஒரு தொழில்நுட்ப குறைத்தீர்ப்பு வழிமுறை குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஜி.எஸ்.டி. அமலாக்கத்திற்கு பின் வாட் சட்டத்தில் இருந்து ஜி.எஸ்.டி சட்டத்தில் பதிவெண் பெற தவறிய வணிகர்களின் பதிவுச்சான்று இரத்தினை சிறப்பு நேர்வாக கருதி அவர்களுக்கு விலக்களித்திட வேண்டும் என்று அமைச்சர்  ஜெயக்குமார்  இன்றைய கூட்டத்தில் தெரிவித்தார். சரக்குகள் மற்றும் சேவைகள் வரி சட்டமானது, 1.7.2017 முதல் அமல்படுத்தப்பட்ட பின் நடைபெற்ற சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்ற கூட்டங்களில் வணிக பிரதிநிதிகள், வணிக கூட்டமைப்பு மற்றும் வணிகர்களிடமிருந்து பெறப்பட்ட 84 கோரிக்கைகள் மன்றத்தின் பரிசீலனைக்கு வைக்கப்பட்டன. இதில் தமிழ்நாடு தொடர்பான 38 கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்பட்டு வரிவிலக்கு மற்றும் வரிக்குறைப்பு செய்யப்பட்டுள்ளன. 

மீதமுள்ள கோரிக்கைகளான வணிக சின்னம் இடப்பட்ட அல்லது இடப்படாத அனைத்து உணவு வகைகள், வணிக சின்னமிடப்படாத பேக்கரி பொருட்கள், பிஸ்கட்கள், தீப்பெட்டிகள், ஊறுகாய், ஜவ்வரிசி, பம்பு செட்டுகள்; விவசாயத்திற்கு பயன்படுத்தக்கூடிய இயந்திரங்கள் மற்றும் கருவிகள், மீன்பிடிப்புக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள், வெண்ணெய், நெய், சின்னமிடப்படாத சிப்ஸ், மிக்சர், முறுக்கு வகைகள் மற்றும் வத்தல், ரஸ்க், சின்னமிடப்படாத பானங்கள், நன்னாரி சர்பத், கற்பூரம், மாற்றுத்திறனாளிகளால் பயன்படுத்தப்படும் பொருட்கள், ஜவுளி பொருட்கள் உற்பத்திக்கான இயந்திர பாகங்கள், கொத்தமல்லி, காய்ந்த மிளகாய், சுக்கு, மிளகு, மஞ்சள், மிளகாய், கடுகு கொண்டு தயாரிக்கப்படும் மசாலா பொருட்கள், சிகைக்காய், இஞ்சினியரிங் பாகங்கள் தொடர்பான சில்லரை வேலைகள், டைரி, கடித உறைகள், ஆடைகளில் பயன்படுத்தப்படும் ஜிப்பர், காதி மற்றும் கிராமப்புற தொழில் பொருட்கள்; ஆடைகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் பிளீச் லிக்யூட், கைத்தறி ஜவுளிகள், பவானி தரைவிரிப்பு மற்றும் ஜமக்காளம், கட்டுமான தொழிலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள், மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக், கல்வி நிறுவனங்களால் செய்யப்படும் சேவைகள், வேப்ப உரம், அரிசி தவிடு, சானிட்டரி நாப்கின்கள், வெள்ளி கொலுசு, மெட்டி, அரைஞாண்கயிறு, தாலி, வெளிப்புற உணவு விநியோக சேவை, செங்கல் தயாரிப்பிற்கான இணக்கமுறை வரிசெலுத்தம், பட்டு ஆடைகள், பட்டு நூல், நாரினால் செய்யப்பட்ட பாய், மெல்லும் புகையிலை, விவசாயம் தொடர்பான சேவைகள், அலுமினியம் கழிவுகள் மற்றும் அலுமினிய பொருட்கள், சிட்பண்ட் தொடர்பான சேவைகள், உணவகங்களுக்கான இணக்கமுறை வரிவிதிப்பு, கையால் நெய்யப்படாத பைகள், கழிவு செய்யப்பட்ட டயர்கள் ஆகியவற்றின் மீதும் விரைந்து முடிவு எடுக்கும்படி அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுக் கொண்டார்'' என்று கூறப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க