வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (11/03/2018)

கடைசி தொடர்பு:07:00 (11/03/2018)

''திட்டம்னாலும்  காவிரி மேலாண்மை வாரியம்னாலும் ஒன்னுதான்..! தமிழக அரசு விளக்கம்

காவிரி ''உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட ''திட்டம்'' என்பது, காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையில் குறிப்பிட்டுள்ள காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு தான்'' என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. 

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில், ''காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு மற்றும் ஆணைகளை செயல்படுத்துவதற்கு ஒரு ''திட்டத்தை (scheme) ஆறு வார காலத்திற்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள ''திட்டம்'' என்னவென்பதை 1956-ம் ஆண்டைய பன்மாநில நதிநீர் தாவா சட்டம் பிரிவு 6(A)(2)-ல் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ''திட்டம்'' என்பது, நடுவர் மன்ற இறுதி ஆணையையும், தற்போது உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் செயல்படுத்த ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும், அந்த அமைப்பின் உறுப்பினர்கள், அதிகார வரம்புகள் மற்றும் செயல்பாடுகள் ஆகியன வரையறுக்கப்பட வேண்டும் என்றும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றம், அதன் 16.2.2018 நாளிட்ட தீர்ப்பில், பத்தி 397-ல், நீர்ப் பங்கீட்டில் மாற்றம் செய்யப்பட்டதைத் தவிர, காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள இதர இனங்களில் மாற்றம் ஏதும் தேவையில்லை என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

 இது தவிர, பத்தி 399-ல், காவிரி நடுவர் மன்றம், நீர் முறைப்படுத்தும் குழு சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் மத்திய நீர்வளக் குழுமம் ஆகியவற்றின் உதவியோடு நீர் விடுவிப்பதை மாதாந்திர வாரியாக கண்காணிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. மேற்கண்ட தீர்ப்பின்படி, உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட ''திட்டம்'' என்பது, காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையில் குறிப்பிட்டுள்ள காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு தான் என்றும், அவ்வாணையில் அதிகார வரம்புகளுடன் இவ்வமைப்புகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் தெளிவாக உள்ள நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை, காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையில் குறிப்பிட்டுள்ளவாறு அமைப்பதைத் தவிர மத்திய அரசுக்கு வேறு மாற்று வழி இல்லை என  தமிழ்நாடு அரசின் சார்பில்  தெளிவுபடுத்தப்பட்டது. மத்திய அரசின் சார்பில் 9.3.2018 அன்று கூட்டப்பட்ட கூட்டத்தில், மேற்கண்ட கருத்துக்கள் மிகத் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டன.

காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, ஆறு வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். காவிரி நதிநீர் பிரச்சனையில், தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டவும், காவிரி நீரை ஆதாரமாகக் கொண்ட தமிழ்நாடு வேளாண் பெருங்குடி மக்களின் நலன்களைப் பேணிப் பாதுகாப்பதற்கும் தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் உறுதியாக தொடர்ந்து மேற்கொள்ளும்''  என்று கூறப்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க