'இன்று போலியோ முகாம்... பெற்றோர்களே மறவாதீர்!'

போலியோ நோய் ஒழிப்புக்காக ஆண்டுதோறும் குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் சொட்டு மருந்து, இன்று  தமிழகம் முழுவதும் கொடுக்கப்படுகிறது. அதற்காக அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் காலை 7 மணி முதல் சொட்டு மருந்து வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

போலியோ சொட்டு மருந்து

தமிழகத்தில் போலியோவை முற்றிலும் ஒழிக்க, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 2 தவணைகளில் சொட்டு மருந்து கொடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி முதல் தவணையாக கடந்த மாதம் 28-ம் தேதி போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இரண்டாம் தவணையாக இன்று கொடுக்கப்படுகிறது. காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என 43,051 மையங்கள் பிரத்தியேகமாக நிறுவப்பட்டு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

மேலும், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் மருந்து வழங்க ஆயிரம் நடமாடும் மையங்களும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட வேண்டும். மேலும் புதிதாய் பிறந்த குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கலாம் என ஏற்கனவே தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு 14-வது வருடமாக போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளது. இந்த நிலையை தக்க வைத்துக் கொள்ளவும், குழந்தைகளை போலியோ வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதும் மிகவும் இன்றியமையாததாகும். எனவே, பெற்றோர்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!