’பசுஞ்சாண விபூதிக்காக பழனி டூ சென்னை நடைபயணம்!’ - விபூதி சித்தர் அறிவிப்பு

”கோவில்களில் சுண்ணாம்பு மற்றும் ரசாயனம் கலந்த விபூதி அபிசேகத்திற்குப் பயன்படுத்துவதற்கு பதிலாக  பசுஞ்சாண விபூதியை பயன்படுத்திட வேண்டும்” என மாநில ஆலய பாதுகாப்புக்குழு அமைப்பாளரும், பழனி விபூதி சித்தர் தெரிவித்துள்ளார்.

விபூதி சித்தர்

திருச்செந்தூரில் தமிழ்நாடு தெய்வீக தமிழ்புரட்சிப் பாசறை மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்,  செய்தியாளர்களிடம் பேசிய பழனி விபூதி சித்தர் ஆதிலம், “ தமிழகத்திலுள்ள முக்கிய பெரிய திருக்கோவில்களில் சுண்ணாம்பு மற்றும் ரசாயனக்கலவை கலந்த விபூதியே மூலவர் சிலைகளுக்கு அபிசேகத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கலப்பட விபூதியை சிலைகள் மீது பூசி அபிசேகம் செய்வதால், சிலைகளில் இவை ஒட்டிக் கொள்கிறது. பிறகு, இவற்றை  அகற்றுவதற்காக பிரஷ் வைத்து தேய்க்கிறார்கள். இதனால், சிலைகள் பாதிப்பு அடைகின்றன.

பழனி தண்டாயுதபாணி கோவிலிலும் இதே கலப்பட விபூதிதான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் நவபாஷாண சிலை பாதிப்படைகிறது. இதே நிலைதான் மற்ற கோவில்களிலும் நடந்து வருகிறது. அபிசேகத்திற்குப் பயன்படுத்தப்பட்ட இந்த கலப்பட விபூதியை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த விபூதியை பக்தர்கள் நெற்றில் வைக்கும் போது அதில கலந்துள்ள ரசாயனத்தால் பருக்கள் தோன்றுகின்றன. நெற்றிப்பகுதி, கறுப்பு நிறத்தில் மாறி விடுகிறது. சிலர், தான் விபூதி பூசும் போதும், அடுத்தவர்களுக்கு விபூதி பூசிவிடும் போடும்  தலையில் ஒரு துளி அளவு விபூதியைத் தலைவில் போடும் பழக்கம் வைத்துள்ளனர். இப்படி போடுவதால், முடி கொட்டுகிறது.  இந்த விபூதியை வாயில் போடுவதாலும், தண்ணீரில் கலந்து குடிப்பதாலும் சிறுநீரக பாதிப்பு, வயிற்றுக்கோளாறு, நெஞ்சு எரிச்சல் ஆகிய பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

நாங்கள் சித்தர் யோக வழிமுறையில் 10 வகை மூலிகைகள் கலந்த பசுஞ்சாண விபூதி செய்து கொடுக்க தயாராக இருக்கிறோம். இந்த விபூதி தயாரிப்பது மிகவும் கடினம். இந்த விபூதி பார்ப்பதற்கு நிறம் மங்கலாக இருக்கும். ஆனால், ரசாயனம் கலந்த விபூதி ’பளிச்’சென இருப்பதால் அதைதான் விரும்புகிறார்கள். ஒரு கிலோ விபூதி தயாரிக்க ரூ.700 வரை செலவாகிறது. ஆனால், சாதரண விபூதியின் விலை மிகக் குறைவு. நாங்கள் தயாரித்த பசுஞ்சாண விபூதியை திருச்செந்தூர் கோவிலுக்கு பயன்பாட்டிற்கு கொடுத்தோம். மூலவருக்கு அபிசேகம் செய்யும் போத்திகளும் நன்றாக இருப்பதாக கூறி உள்ளனர். வரும் மே7ம் தேதி பழனியில் இருந்து சென்னை நோக்கி நடைபயணமாக சென்று, தமிழக கோவில்களில் பசுஞ்சாண விபூதியை பயன்படுத்த வலியுறுத்தி ஆளுனரிடம் மனு அளிக்க இருக்கிறோம்” என்றார்.

  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!