பயணிகளை துரத்தி துரத்தி கடித்த வெறிநாய்! - அச்சத்தில் உறைந்த ராமேஸ்வரம் மக்கள்

ராமேஸ்வரத்தில் ரயில்நிலையத்திற்கு சென்ற உள்ளூர் பயணிகளை வெறிநாய் கடித்ததால் 10-க்கும் மேற்பட்டவர்கள் ராமேஸ்வரம் மற்றும் ராமநாதபுரம் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

ராமேஸ்வரத்தில் வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள்

ராமேஸ்வரம் பகுதியில் சமீப காலமாக தெருக்களின் சுற்றித்திரியும் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த புளூ க்ராஸ் அமைப்பு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் நாய்களின் எண்ணிக்கை பெருகிவரும் நிலையில்  அவற்றை கட்டுப்படுத்த நாய்களுக்கு கருத்தடை செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. ஆனால் இந்த நடவடிக்கை பெயரளவுக்கே மேற்கொள்ளப்பட்டதுடன் இதற்கென ஒதுக்கப்பட்ட நிதியும் போன இடம் தெரியாமல் போனது.

இந்நிலையில் ராமேஸ்வரத்தை சேர்ந்த  உள்ளூர் பயணிகள் ரயில் மூலம் வெளியூர் செல்வதற்காக இன்று காலை ரயில் நிலையம் நோக்கி சென்றனர். அப்போது அப்பகுதியில்  சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று இவர்களை விரட்டி விரட்டி கடித்துள்ளது. நாய் கடியிலிருந்து தப்பிக்க நாலா புறமும் சிதறி ஓடியும் விடாமல் துரத்தி சென்று கடித்தது. இதில்  நம்புத்தாய், காளியம்மாள், காளீஸ்வரி, ரெங்கசாமி, ராஜலெட்சுமி, ஜாபர்,பாலமுருகன் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

இதையடுத்து ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு வந்த இவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நால்தோறும் ஆயிரகணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் ராமேஸ்வரத்தில் பெருகி வரும் வெறிநாய்களினால் பெரும் அசம்பாவிதம் நேரும் முன்னர் அந்த நாய்களை கட்டுப்படுத்த சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!