வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (11/03/2018)

கடைசி தொடர்பு:13:50 (11/03/2018)

’அப்போது கோட்டைவிட்ட திமுக, இப்போது பேசுவது சரியில்லை!’ - எடப்பாடி பழனிசாமி காட்டம் #CauveryIssue

'மத்திய நீர் வளத்துறை அமைச்சகம் நடத்திய காவிரி ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்தின் நிலைப்பாட்டைத் தெளிவாக எடுத்துச்சொல்லி இருக்கின்றோம்' எனக் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதலமைச்சர் தெரிவித்தார். 

எடப்பாடி பழனிசாமி

தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்கள் பங்கேற்ற காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான சமீபத்திய ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகம் சார்பில் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், பொதுப்பணித்துறைச் செயலர் பிரபாகர் மற்றும் காவிரி தொழிற்நுட்பப் பிரிவு தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்றனர். 

இந்த ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ’காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை, எடுத்துச் சொல்லி, தமிழகத்தின் நிலைப்பாட்டைத் தெளிவாக ஆலோசனைக் கூட்டத்தில் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் எடுத்துரைத்தனர்’ என்றார்.

மேலும், காவிரி தொடர்பான வழக்கில் தமிழக அரசு முறையாக வாதாடவில்லை என்ற வைகோ குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த முதல்வர், ’காவிரி வழக்கில் அதிமுக அரசு 13 முறை வாதாடியுள்ளது. தமிழகத்தின் சார்பாக, அதிமுக பல்வேறு கோரிக்கைகளை நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளது. ஆகவே, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாம் விமர்சிக்க முடியாது. இருப்பினும், காவிரி வழக்கின் ஒவ்வொரு காலகட்டத்திலும், தமிழகத்தின் உரிமைகள் என்ன என்பதை வாதத்தின் மூலமாக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் எடுத்து வைத்திருக்கின்றனர். அதை யாரும் குறை சொல்லக் கூடாது. அவர்கள் அரசியல் ஆதாயத்திற்காக பேசுகிறார்கள்’ என்றார். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால் நாடாளுமன்ற எம்.பி.கள்., தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனத் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு பதில் அளித்த முதல்வர், ’2007-ம் ஆண்டு நடுவர் மன்ற தீர்ப்பு வந்துவிட்டது. அப்போது, மாநிலத்தில் தி.மு.க ஆட்சி செய்தது, மத்திய ஆட்சியிலும் தி.மு.க அங்கம் வகித்து. அதிகாரத்தில் இருந்தபோதே தி.மு.க காவிரி நதிநீர் குறித்து எந்தச் செயல்பாடுகளையும் எடுக்கவில்லை. அப்போது எல்லாம் கோட்டை விட்டுவிட்ட திமுக இப்போது இதுகுறித்து பேசுவது சரியில்லை’, எனத் தெரிவித்தார்.