வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (11/03/2018)

கடைசி தொடர்பு:18:12 (11/03/2018)

தினகரனின் புதிய கட்சி தொடக்க விழாவுக்கு தயாராகும் மேலூர்!

புதிய கட்சியின் பெயர் அறிவிக்கும் விழாவை மதுரை மாவட்டம் மேலூரில் நடத்தபோவதாக டி.டி.வி.தினகரன் நேற்று அறிவித்தார். அதைத்தொடர்ந்து அவருடைய ஆதரவாளர்கள் உற்சாகமாக அதற்கான வேலைகளில் இறங்கிவிட்டார்கள்.

தினகரன் புதிய கட்சி

இதுகுறித்து தினகரன் ஆதரவாளர் ஒருவர் பேசுகையில், ’தினகரனின் அடுத்தடுத்த செயல்பாடுகளால் மதுரை மாவட்ட  அதிமுக  அமைச்சர்களான  செல்லூர் ராஜு மற்றும்  ஆர்.பி.உதயகுமார்  ஆடிப்போயுள்ளனர். வருகிற 30ம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு பிரமாண்ட விழா நடத்தி 70 ஜோடிகளுக்கு இலவசத் திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகளை அமைச்சர் உதயக்குமார் செய்து வருகிறார். இதில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். இந்த நிலையில் அந்த விழாவுக்கு முன் தினகரனின் புதிய கட்சி தொடங்கும் விழா நடந்தால், அது தாங்கள் நடத்தவுள்ள விழாவுக்கு சேதாரத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறார்கள். அதனால், காவல்துறை மூலம் அனுமதி கொடுக்க தடை செய்ய ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது. 

ஆனால், அதைப்பற்றி கவலைப்படாமல் எதாக இருந்தாலும் நான் பார்த்து கொள்கிறேன் என்று தினகரன் உறுதி அளித்ததால் இன்று பந்தக்கால் நடும் நிகழ்ச்சியை மேலூரில் நடத்தினோம். தினகரனை பொறுத்தவரையில் மதுரையை தன்னுடைய அரசியல் வாழக்கைக்கு ஏற்றம் தரும் நகரமாக நம்புகிறார். அவருக்கு ஆதரவாக முதல் ஆர்பாட்டம், முதல் அரசியல் பொதுக்கூட்டம் மதுரையிலேயே நடந்தது. மதுரையை மையமாக வைத்தே பல நிகழ்வுகள் வெற்றியை தந்திருப்பதாக நம்புகிறார். அந்த அடிப்படையில் கட்சி பெயர் அறிவிக்கும் விழாவை, மதுரை மேலூரில் நடத்தப்போவதாக அறிவித்தார். இங்கு நடந்த முதல் அரசியல் பொதுக்கூட்டத்தில் பெருவாரியாக மக்கள் கலந்து கொண்டனர்.

விழாவுக்கான கால்கோல் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. மாநில நிர்வாகி மேலூர் சாமி முன்னிலையில் முன்னாள் எம்.எல்.ஏக்கள் பழனியப்பன், செந்தில்பாலாஜி, உமாதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர். இது உடனே ஏற்பாடு செய்த நிகழ்ச்சி என்றாலும் ஆயிரக்கணக்கில் தொண்டர்கள்  வந்திருந்தனர். வரும் 15ம் தேதி மிக பிரமாண்டமாக விழாவை நடத்தப்போகிறோம்.  இதை எப்படி எதிர்கொள்வது என்று மதுரை மாவட்ட அ.தி.மு.க. அமைச்சர்கள், நிர்வாகிகள்  ஆலோசித்து வருகிறார்கள்’ என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க