`விவசாயிகள் கொந்தளிப்பு?’ - கீழடி நான்காம்கட்ட ஆய்வுப் பணிகள் தொடங்குவதில் சிக்கல்

சிவகங்கை மாவட்டம், கீழடியில் பள்ளிச்சந்தை புதூரில், மத்திய தொல்லியல் துறையை சேர்ந்த பெங்களூரு அகழாய்வு குழுவினர், கடந்த மூன்று ஆண்டுகளாக அகழ்வாராய்ச்சி செய்தனர். இதில், சங்க காலத் தமிழர்களின் நகர நாகரிகத்திற்கான சான்றுகளாக சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்தன.

கீழடி

 

நான்காம் ஆண்டு அகழ்வாராய்ச்சி செய்ய அக்குழுவினருக்கு மத்திய தொல்லியல்துறை அனுமதி வழங்கவில்லை. ஆனால் தமிழகத் தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொள்ள அனுமதி வழங்கியது. அதனால், கடந்த ஜனவரி மாதம் அகழ்வாராய்ச்சி துவங்கும் என எதிர்பார்த்த நிலையில் காலதாமதமாகி வருகிறது.

இந்நிலையில், தற்போது தொல்பொருட்கள் புதைந்துள்ள நிலத்தின் உரிமையாளர்கள் சிலர், அகழாய்வு செய்வதற்காக தோண்டப்படும் குழிகளால் தென்னைமரங்கள் பட்டுப்போகின்றன என்றும், அதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என  முறையிட்டுள்ளனர். மேலும், அதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைக்கின்றனர். இதற்காக பாதையாக இருந்த பட்டா நிலங்களிலும் கல்வேலி அமைத்து தென்னங்கன்றுகள் பயிரிட்டுள்ளனர்.

இதனால் தமிழகத் தொல்லியல்துறையினர் தொல்பொருட்கள் புதைந்துள்ள இடத்தினை ஜி.பி.ஆர்.எஸ். கருவி மூலம் கண்டறிந்து அகழ்வாராய்ச்சி செய்ய முடிவெடுத்துள்ளனர். தமிழகத்தில் முதல் முறையாக ரூ.3 கோடி மதிப்பிலான ஜி.பி.ஆர்.எஸ். கருவி மூலம் 70 அடி ஆழத்தில் உள்ள தொல்பொருட்களை ஸ்கேனிங் செய்யும் பணியை 2 நாள்களாக அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.  

இந்நிலையில், தமிழகத் தொல்லியல் துறையைச் சேர்ந்த புவியியல் பேராசிரியர் ராம்குமார் தலைமையில் 15 ஆய்வு மாணவர்களுடன் நேற்று கீழடி பள்ளிச்சந்தை புதூரில் உள்ள தென்னந்தோப்பில் ஜி.பி.ஆர்.எஸ். கருவி மூலம் ஆய்வு செய்ய முயன்றனர். அதற்கு நிலத்தின் உரிமையாளர்கள் சிலர்  எதிர்ப்பு தெரிவித்தனர். தென்னை மரங்களுக்கு இழப்பீடு வழங்குவதென்றால் ஆய்வு செய்யுங்கள் இல்லையென்றால் ஆய்வு செய்ய வேண்டாம் என நிலத்தின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, திருப்புவனம் தாசில்தார் கமலம், சம்மந்தப்பட்ட கீழடி விவசாயிகளை அழைத்து சமாதனக் கூட்டம் நடத்தினார். அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் நிவாரணம் கேட்டனர். அப்போது நிலத்தின் உரிமையாளர்கள் சிலர் ஆய்வு செய்வதற்கு இடம் வழங்குவதாகவும், அடைபட்ட பாதையை ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை விடுத்தனர். கீழடி ஆய்வுக்கு இடம் தேவைப்படும் விவசாயிகளுடன் நடத்தப்பட்ட அந்த சமாதானக் கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் ஒரு செண்ட் ரூ.2 லட்சம் வீதம் கிரையம் செய்த பிறகு ஆராய்ச்சிகளை தொடங்கலாம் என்று சொல்லி கூட்டத்தில் இருந்து வெளியேறிவிட்டார்கள்.

இதனால், வரும் திங்கள்கிழமை வட்டாட்சியர் அலுவலகத்தில் சமரசப் பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறு கீழடி அகழாய்வுப் பகுதியில் நிலம் வைத்துள்ளவர்களுக்கு வட்டாட்சியர் அழைப்பு விடுத்தார். இதனால், ஜி.பி.ஆர்.எஸ். கருவி மூலம் ஸ்கேனிங் செய்ய வந்த தொழில்நுட்பக் குழுவினர் ஆய்வு செய்ய முடியாமல் திரும்பிச் சென்றனர்.

கீழடி

இதுகுறித்து கீழடி விவசாயி சந்திரனிடம் பேசும் போது..,  ' கீழடியை உலகறியச் செய்தது இந்த அகழ்வாராய்ச்சி. இது எங்களுக்கு பெருமையாக உள்ளது. அதே நேரத்தில் ஆராய்ச்சி செய்யும் இடத்திற்கு வரும் வழித்தடங்கள் எங்களுக்கு விவசாயம் செய்ய முடியாமல் போய்விட்டது. மாநில அரசாங்கமோ,மத்திய அரசாங்கமோ எங்களுக்கு நிவாரணம் கொடுத்துவிட்டு வேலையை தொடங்கட்டும். எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டக் கூடாது .தென்னை விவசாயத்தை நம்பி தான் நாங்கள் உயிர் வாழ்கிறோம் என்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!