பிறரை மகிழ்விக்கும் முகமூடிக்கு பின்னால் ஒளிந்திருக்கும் சோகம்! - கலங்கும் மஸ்கராத் நடனக் கலைஞர்கள்

இசைக்கேற்ப நடனமாடி பார்வையாளர்களையும் நடனமாட வைப்பதே இந்த ’மஸ்கராத்’ நடனத்தின் சிறப்பு. அழகிய வண்ணமயமான ஆடைகளில் நடனமாடினாலும்கூட, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒருகனம் பயப்படவைப்பது நடன கலைஞர்கள் அணிந்திருக்கும் முகமூடிகள்தான். முதலில் மட்டுமே  பயம்,  அடுத்த  சில நிமிடங்களில் நடன குழுவினருடன்  குழந்தைகளும்  நடனமாடுவார்கள். 

மஸ்காத் நடனம்

14ம் நூற்றாண்டில் ஐரோப்பா நாடுகளில் உள்ள ராஜ குடும்பத்தினரை மகிழ்விக்க பல்வேறு குறும்பு அசைவுகளுடன் இந்த மஸ்கராத் நடனம் நடத்தப்பட்டது. இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி உட்பட பல்வேறு நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட நடனமாக இருந்தாலும் கூட பிரான்ஸ் நாட்டினரே இந்த நடனத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். அகோரமான உருவம் மற்றும் விலங்குகளின் முகமூடி அணிந்த உடையுடன் ஆடுவதே இந்த நடனத்தின் சிறப்பு. 

மஸ்கராத் நடனத்தில் ஆண், பெண், கரடி நாய், குரங்கு, சேவல், பேய், மிக்கிமவுஸ் உட்பட பல்வேறு உருவங்களின் முகமூடிகள் பயன்படுத்தப்படுகின்றன. அணிந்திருக்கும் முகமூடிகளின் உருவத்திற்கு ஏற்றாற்போல் உடல் அசைவுகளுடன் பார்வையாளர்களை பயமுறுத்தி மகிழ்விப்பதுதான் இந்த நடனத்தின் சிறப்பு. மேலும் விலங்குகளின் பாய்ச்சல், கர்ணம் போன்ற சாகச செயல்களும் நடனத்தில் அதிகம் காணப்படுவதால் ஆண்களின் பங்களிப்பே அதிகமாக இருக்கும்.

புதுச்சேரி மாநில பாரம்பரிய நடனமாக மஸ்கராத் சிறந்து விளங்குவதால் அரசு விழாக்களில் இந்த நடனத்தின் பங்கு கண்டிப்பாக இருக்கும். மேலும் சுப நிகழ்ச்சிகள், கோவில் விழா, மற்றும் அரசியல் மாநாடு, ஊர்வலம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் இந்த நடனம் நடத்தப்படுகிறது. பொது இடங்களில் நடத்தப்படும் இந்த நடனத்தைப் பார்த்தால் சுற்றுலாப் பயணிகளுக்கு கொள்ளைப் பிரியம். அவர்கள் கேமராக்கள் கிளிக், கிளிக் சத்தத்துடன் நடனம் முடியும் வரை படமெடுக்கும். 

மஸ்கராத் நடனம்

மஸ்கராத் நடனம் குறித்து மஸ்கராத் நடன இயக்குனர் குருசுக்குப்பம் அருள் கூறும்போது, 'கடந்த காலங்களில் புதுச்சேரியில் பிரசித்திப்பெற்று விளங்கிய இந்த மஸ்கராத் நடனம் தற்போது மிகவும் நலிவடைந்து உள்ளது. இந்த நடனத்தை நம்பிதான் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றோம். இந்த நடனத்துக்கென்று பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட உடைகளை  மிகவும் அதிகமாக விலைகொடுத்து வாங்க வேண்டிய நிலைஉள்ளது. மேலும் வெயில் நேரத்தில் 15 நிமிடங்களுக்கு மேல் இந்த கம்பளி போல் உள்ள  ஆடையை அணிந்து நடனமாட முடியாது. வயிற்றுப பிழைப்புக்காக நீண்ட நேரம் நடனமாடி உடல் மிகவும் சோர்வடைந்தது நோயுறுவதால் பலர் இந்த தொழிலுக்கு வர பயப்படுகின்றனர். தற்போது அரசு விழாக்களில் மட்டுமே நடனமாடும் எங்களை பெரும்பாலும் தனியார் நிகழ்சிகளுக்கு அழைப்பதில்லை. இதனால் எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது’  என்றார். 

பார்வையாளர்களின் மகிழ்ச்சியுடன் கூடிய கைத்தட்டலைப் பெரும் மஸ்கராத் நடனக் கலைஞர்களின் வாழ்வில் மகிழ்ச்சி என்பது கைக்கு எட்டாமலே உள்ளது.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!