வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (11/03/2018)

கடைசி தொடர்பு:22:30 (11/03/2018)

நீண்டகால தண்ணீர் பிரச்னையைத் தீர்க்கப் பாடுபடும் ராஜபாளையம் எம்.எல்.ஏ.!

ஒவ்வொரு மாத ஊதியத்தை ஆதரவற்றோர்களுக்கு வழங்குவது மட்டுமில்லாமல், பலருக்கும் தனிப்பட்ட முறையில் உதவி செய்து  மக்கள் எம்.எல்.ஏ. என்று மக்களால் அழைக்கப்படும் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன், அப்பகுதியின் நீண்டகால குடிநீர் பிரச்னையைத் தீர்க்கும் வகையில் திட்டத்தை செயல்படுத்தி இன்று (11.3.2018) தொடங்கி வைத்தார். 

தண்ணீர்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதியில் குடிநீர் தட்டுப்பாடு பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், நடப்பு ஆண்டுக்கான  சட்ட மன்ற உறுப்பினர்  மேம்பாட்டு நிதியிலிருந்து, ராஜபாளையம் நகருக்குள்ளும், கிராமப்பகுதியிலும் 40 இடங்களில் ஆழ்குழாய் போர்வேல் போட்டு சிண்டெக்ஸ் அமைக்கும் பணிக்காக ரூபாய் 1 கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் தீட்டப்பட்டது. 

கிராமப்பகுதிகளில் பணி நடைபெற்று வருகிற நிலையில், நகர் பகுதியில் முதல் கட்டமாக  19-வது வார்டில் இந்தப் பணி முடிவடைந்த நிலையில், குடிநீர் விநியோகத்தை எம்.எல்.ஏ. தங்கபாண்டியன் இன்று தொடங்கி வைத்தார். கோடை காலம் வருவதற்கு முன் தங்கள் பகுதியின் தண்ணீர் பிரச்சனையை தீர்த்து வைத்ததற்கு மக்கள் நன்றி தெரிவித்தனர். ''விரைவில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு, அனைத்துப் பகுதியிலும் குடிநீர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்'' என்று மக்களிடம் எம்.எல்.ஏ. தங்கப் பாண்டியன் உறுதி கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க