திருமணம் ஆன 3 மாதங்களில் உயிரிழந்த கோவை ஆயுள் தண்டனை கைதி!

கோவை மத்திய சிறையில், உடல்நலக்குறைபாடு காரணமாக ஆயுள் தண்டனை கைதி ரிஸ்வான் உயிரிழந்துள்ளார்.

ரிஸ்வான்

ரிஸ்வான்

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் பழனிபாபா என்பவர் கடந்த 1997-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையைத் தொடந்து, கோவையில் கலவரம் ஏற்பட்டது. இந்தக்  கலவரத்தில் கிருஷ்ணசாமி என்ற ஆசிரியர் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து, இந்த வழக்கில் கைதான ரிஸ்வான் பாஷா என்பவர் உள்ளிட்ட மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கோவை சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்த ரிஸ்வான் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனால், அவருக்கும் இந்தக் கொலைக்கும் சம்பந்தமில்லை என்று, அவரது குடும்பத்தினரும், இஸ்லாமிய அமைப்புகளும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். 

இதனிடையே, கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாகவே வலிப்பு நோயால் ரிஸ்வான் அவதிப்பட்டுவந்தார். இந்நிலையில், நேற்று இரவு அவருக்கு மீண்டும் வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது . இதையடுத்து, சிறைத்துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். இந்நிலையில், ரிஸ்வான் இன்று காலை  திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதைத்தொடர்ந்து, அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ரிஸ்வான் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினர். சிறை மருத்துவமனையில், நேற்றிரவு போதுமான சிகிச்சை அளிக்காததால்தான் ரிஸ்வான் இறந்து விட்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ரிஸ்வான்

திருமணத்தின்போது ரிஸ்வான்

20 ஆண்டுகளாக சிறையில் இருந்த ரிஸ்வான், முதல்முறையாக கடந்த நவம்பர் மாதம் 28 நாள்கள் பரோலில் வெளிவந்தார். அப்போதுதான், சமீரா பானு என்றப் பெண்ணை ரிஸ்வான் திருமணம் செய்தார். திருமணம் முடிந்த சில நாள்களில் சிறைக்குச் சென்ற ரிஸ்வான், அடுத்த சில மாதத்தில் உயிரிழந்துந்துள்ளார்.

இந்நிலையில், சிறையில் கைதிகளுக்கு மாஸ்டர் ஹெல்த் செக் அப் செய்ய வேண்டும், 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும், கைதிகளுக்கு உரிய மருத்துவ உதவிகள் வேண்டும், ரிஸ்வானின் குடும்பத்துக்கு இழப்பீடும், அவரது மனைவிக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்களும், இஸ்லாமிய அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக, வட்டாட்சியரிடமும் அவர்கள் மனு அளித்துள்ளனர்.

ரிஸ்வான்

சடலமாக ரிஸ்வான்

கோவை குண்டு வெடிப்பு கைதியான, ஒசீர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, இதே கோவை மத்திய சிறையில் உடல்நலக்குறைபாடு காரணமான உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!