`போடி மலைப்பகுதி காட்டுத் தீயில் சிக்கிய மாணவிகள்!’ - ட்ரெக்கிங் சென்றபோது விபரீதம் | Theni: College students trapped in forest fire

வெளியிடப்பட்ட நேரம்: 18:48 (11/03/2018)

கடைசி தொடர்பு:18:51 (11/03/2018)

`போடி மலைப்பகுதி காட்டுத் தீயில் சிக்கிய மாணவிகள்!’ - ட்ரெக்கிங் சென்றபோது விபரீதம்

போடி குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்றப் பயிற்சி மேற்கொண்ட 27 மாணவிகள் காட்டுத் தீயில் சிக்கியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

காட்டுத் தீ

தேனி மாவட்டம் போடியை அடுத்த குரங்கணி மலைப்பகுதியில் நேற்று இரவு முதல் காட்டுத் தீ பற்றியெரிந்து வருகிறது. இதனால், மலைப்பகுதியில் பல நூறு ஏக்கரிலான மரங்கள் எரிந்து நாசமாகின. இந்தநிலையில், குரங்கணி மலைப்பகுதிக்கு மலையேற்றப் பயிற்சிக்காகக் கல்லூரி மாணவிகள் 27 பேர் சென்றுள்ளனர். காட்டுத் தீயில் அவர்கள் சிக்கிக் கொண்டதாக அப்பகுதி மக்களுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, தேனி சுற்றுவட்டாரத்தில் உள்ள தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள், வனக் காவலர்கள், ஊர்மக்கள் என நூறுக்கும் மேற்பட்டோர் மாணவிகளை மீட்பதற்காக விரைந்துள்ளனர். இதுகுறித்து  தகவலறிந்த தேனி மாவட்ட  ஆட்சியர் பல்லவி பல்தேவ், எஸ்.பி. பாஸ்கரன் உள்ளிட்ட அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மாணவிகளை மீட்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில், மீட்புப் பணிகளைப் பார்வையிடுவதற்காக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். மாவட்ட வன அலுவலர் தலைமையில் ஒரு குழுவினர் மாணவிகளை மீட்பதற்காக சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர். காட்டுத் தீயின் வீரியம் அதிகமாக இருப்பதால், மாணவிகளை அந்தக் குழுவினர் மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.