வெளியிடப்பட்ட நேரம்: 19:07 (11/03/2018)

கடைசி தொடர்பு:11:32 (12/03/2018)

காட்டுத் தீயில் சிக்கிய மாணவிகளை மீட்கக் களமிறங்கிய இந்திய விமானப்படை!

தேனியை அடுத்த குரங்கணி மலைப்பகுதி காட்டுத்தீயில் சிக்கியுள்ள மாணவிகளை மீட்க இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தேனி மாவட்டம் போடியை அடுத்த குரங்கணி மலைப்பகுதியில் நேற்று இரவு முதல் காட்டுத் தீ பற்றியெரிந்து வருகிறது. இதனால், மலைப்பகுதியில் பல நூறு ஏக்கரிலான மரங்கள் எரிந்து நாசமாகின. இந்தநிலையில், குரங்கணி மலைப்பகுதிக்கு மலையேற்றப் பயிற்சிக்காகக் கல்லூரி மாணவிகள் 27 பேர் சென்றுள்ளனர். காட்டுத் தீயில் அவர்கள் சிக்கிக் கொண்டதாக அப்பகுதி மக்களுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்களை மீட்கும் பணியில் வனத்துறை, காவல்துறை மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் ஈடுபட்டு வருகின்றனர். காட்டுத் தீ வேகமாகப் பரவி வருவதால் மாணவிகளை மீட்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், எஸ். பி. பாஸ்கரன் உள்ளிட்டோர் விரைந்துள்ளனர். 

இந்தநிலையில், காட்டுத் தீயில் சிக்கியுள்ள மாணவிகளை மீட்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு தேனிமாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார். மேலும், அவர்களை மீட்கும் பணியில் விமானப்படையை ஈடுபடுத்த வேண்டும் என்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியரின் அறிவுரைப்படி செயல்பட விமானப்படைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.  இதையடுத்து மாணவிகளை மீட்கும் பணியில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.