வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (11/03/2018)

கடைசி தொடர்பு:21:41 (11/03/2018)

``உஷா குடும்பத்தாருக்கு தேவையான உதவிகளை செய்வோம்’’ - பிரேமலதா விஜயகாந்த் உறுதி

 
திருச்சியில் உயிரிழந்த உஷாவின்  குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளை செய்வதாக தே.மு.தி.க. மகளிரணிச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.  
 
 
பிரேமலதா விஜயகாந்த்
 
திருச்சியில் தே.மு.தி.க. சார்பில் மகளிர் தினவிழா பொதுக்கூட்டம் நடந்து வருகிறது. இதில் கலந்துக்கொள்வதற்காக தே.மு.தி.க. மாநில மகளிரணி செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திருச்சி வந்தார்.
 
உஷா கணவர் ராஜாவை சந்தித்த பிரேமலதா அதனையடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்த அவர்,
"முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகளை, மன்னித்து விட்டதாக ராகுல்காந்தி மற்றும் பிரியாங்காந்தி ஆகியோர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்நிலையில் ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகள் பல ஆண்டுகள் சிறையில் இருந்த காரணத்தினால் அவர் இந்த கருத்தை தெரிவித்திருக்கலாம். இருப்பினும் சட்ட ரீதியாக எடுக்கும் முடிவைத்தான் தே.மு.தி.க. எப்போதும் ஆதரிக்கும்.
 
தமிழகத்தில் தினந்தோறும் பெண்களுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது. அதில் உலக மகளிர் தினத்தில் கர்ப்பிணி பெண் உஷா உயிரிழந்த சம்பவத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.  உஷாவின் கணவர் ஹெல்மெட் அணியாததால் இன்ஸ்பெக்டர் காமராஜ், பின்னாலேயே துரத்திச் சென்று மோட்டார் சைக்கிளை எட்டி உதைத்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
 
ஹெல்மெட் போடாததற்காக அவருக்கு அபராதம் விதித்திருக்கலாம். அதைவிட்டுவிட்டு இப்படியான மனிதாபிமானமற்ற செயலில் இன்ஸ்பெக்டர் காமராஜ் ஈடுபட்டுள்ளார். அவரை சஸ்பெண்டு செய்தது மட்டுமின்றி மிகப் பெரியத் தண்டனை வழங்க வேண்டும். அது மற்ற  காவலர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்" என்றார்.
 
மேலும் உஷா சாவுக்கு காரணமான இன்ஸ்பெக்டரை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது மேலும் வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளது. உஷா உயிரிழந்ததும் மக்கள் தங்களது உணர்வை வெளிப்படுத்தியுள்ளனர். எனவே அவர்களை மன்னித்து வழக்கை வாபஸ் வாங்கி வெளியே விட வேண்டும். நிதி உதவி ஒரு உயிருக்கு ஈடு இணையாகாது. உஷாவின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை தே.மு.தி.க. செய்யும். தமிழகத்தில் தினமும் ஒவ்வொரு கட்சிகள், தலைவர்கள் உருவாகி வருகின்றனர். ஆனால் அதனை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். கடைசியில் தே.மு.தி.க. வெற்றி பெற்று விஜயகாந்த் முதல்வர் ஆவார்.
 
காவிரி பிரச்னையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது வரவேற்கத்தக்கது. விரைவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் இயற்கை வளம். ஆட்சியில் யார் இருக்கிறார்களோ அவர்கள் சுரண்டி விடுகிறார்கள். எம்.சாண்ட் மணல் உறுதிதன்மை குறித்து மக்களுக்கு விளக்க வேண்டியது அரசின் கடமை. ஆற்றில் மணல் எடுப்பது தவறானது" என்றார். அடுத்து பிரேமலதா கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்த உஷாவின் கணவர் ராஜாவை சந்தித்து ஆறுதல் கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க