வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (12/03/2018)

கடைசி தொடர்பு:00:30 (12/03/2018)

``வலுவடையும் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை!’’ - தமிழக, கேரள மீனவர்களுக்கு எச்சரிக்கை

தென் மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையானது வலுவடையும் வாய்ப்பு இருப்பதால் தமிழக, கேரள மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்றவர்கள் பத்திரமாக அருகில் உள்ள கரைகளுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

புயல் எச்சரிக்கை

வங்கக் கடலின் தென் மேற்குப் பகுதியில், இலங்கைக்கும் இந்திய கடல் எல்லைக்கும் இடையே குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி இருக்கிறது. இது குறித்து இந்திய வானிலை மையம் விடுத்துள்ள செய்தியில், வங்கக்கடலின் தென்மேற்குப் பகுதியில் இந்தியா இலங்கை இடையே மையம் கொண்டிருக்கும் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது அடுத்த  48 மணி நேரத்தில் தீவிரம் அடைந்து மேற்கு நோக்கி நகரக்கூடிய வாய்ப்பு உள்ளது. அதன் காரணமாக பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும். அத்துடன், பலத்த காற்று வீசும்.

குறிப்பாக தமிழகத்தின் தெற்குக் கடலோரப் பகுதிகள், மாலத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த மூன்று தினங்களுக்கு பலத்த காற்று வீசக்கூடும். இந்த காற்று மணிக்கு 50 கி.மீ வேகத்தில் இருக்கும். அதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்’ என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான தகவல் மீன்வளத்துறைக்கும் இயற்கை பேரிடர் மேலாண்மை அமைப்புகளுக்கும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

இந்திய வானிலை மையத்தின் இந்த எச்சரிக்கையானது கடந்த ஆண்டு நவம்பர் 30-ம் தேதி குமரிக் கடலோர மக்களின் வாழக்கையைப் புரட்டிப் போட்ட ஒகி புயலுக்கு நிகரானதாக இருப்பதாக மீனவர்கள் சந்தேகிக்கின்றனர். அதனால் ஆழ் கடல் மீன்பிடிப்புக்காக கடலுக்குள் ஏற்கெனவே சென்றுள்ள குமரி மாவட்ட மீனவர்களுக்கு இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி குறித்த எச்சரிக்கையை தெரியப்படுத்த வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இந்திய கடற்படை மற்றும் கடலோர காவற்படையின் உதவியுடன் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்களை எச்சரித்து கரைக்கு அனுப்பவும் அல்லது பாதுகாப்பாக அருகிலுள்ள துறைமுகங்களில் சென்று தங்கியிருக்கவும் அறிவுறுத்த வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மீண்டும் ஒகி புயலின் கோரம் தென்னக கடல் பகுதியில் ஏற்பட்டு விடாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுத்து, கடலுக்குள் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்களுக்கு தகவலைத் தெரிவிக்க வேண்டும் என மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தி உள்ளனர்.