`குரங்கணி காட்டுத் தீயில் சிக்கிய 36 பேர்!’ - 7 பேர் சிறிய காயங்களுடன் மீட்பு

குரங்கணி காட்டுத் தீயில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.   


தேனி மாவட்டம் போடியை அடுத்த குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்காகச் சென்றிருந்த மாணவ, மாணவிகள் காட்டுத் தீயில் சிக்கினர். கொழுக்குமலை செல்லும் வழியில் ஒத்தமலை என்ற பகுதியில் மலையேற்றப் பயிற்சியில் அவர்கள் ஈடுபட்டிருந்த போது காட்டுத் தீயில் சிக்கிக் கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

உள்ளூர் மக்கள் உதவியுடன் வனத்துறையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீஸார் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.  முதலில் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்ற தகவல் தெரியாமல் இருந்த நிலையில், 27 பேர் சிக்கியிருக்கக் கூடும் என்று கூறப்பட்டது. இந்தநிலையில், காட்டுத் தீயில் சிக்கியிருந்த 7 மாணவிகள் மீட்கப்பட்டு போடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டனர். சிறிய அளவிலான காயங்களுடன் அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு வருகிறது. 

அவர்களிடம் விசாரித்ததில், சென்னை, ஈரோடு, சென்னிமலை மற்றும் திருப்பூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 36 பேர் குழுவாக மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டதாகத் தெரிவித்தனர். அவர்களில் 8 பேர் மாணவிகள் எனவும் தெரியவந்துள்ளது. மலைப்பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருபவரிடம் நாம் பேசியபோது, 5 பேர் தீக்காயங்களுடன் உயிரிழந்து விட்டதாகவும், மேலும்  பலர் கடுமையான தீக்காயத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஹெலிகாப்டரால், இரவு நேரம் என்பதால் அப்பகுதியில் தரையிறங்க முடியவில்லை என்று தெரிவித்த அவர், காயமடைந்த மாணவர்களை கயிறு மூலம் கட்டி ஹெலிகாப்டரில் ஏற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார்.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!