'உச்ச நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஏற்க தயார்' - சொல்கிறார் வைகோ!

வைகோ

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலில் இதை முக்கியமான நேர்காணலாய் கருதுகிறேன். இதனால் தான் இதை மதுரையில் ஏற்பாடு செய்தேன் எனக் கூறி அவர் பேசத் தொடங்கினார்.

அதில், "காவிரி நதிநீர்ப் பிரச்னையில் உச்ச நீதிமன்றம் தமிழகத்திற்கு மிகப்பெரும் அநீதி இழைத்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முதலில் ஒப்புக்கொண்ட மத்திய அரசு தற்போது காலம் தாழ்த்தி வருவது எந்த விதத்தில் நியாயம். காவிரி வழக்கில் வாதிட்ட வழக்கறிஞர் பாலிநாரிமன் தமிழகத்தை வஞ்சித்து, கர்நாடகத்துக்குச் சாதகமான தந்திரங்களை முன்வைத்தார். பெங்களூருக்கு குடிநீர் இல்லை எனக்கூறி 14.75 டி.எம்.சி நீரை தமிழகத்துக்குத் தர மறுக்கும் கர்நாடக அரசு, சட்டத்தை மீறி 7லட்சம் ஏக்கர் அதிகமாக பாசனம் செய்து வருவது முறையாகாது.  நீதிபதி தீபக்மிஸ்ராவின் தீர்ப்பு மோடியின் எண்ணத்தை பிரதிபலிக்கிறது. தமிழக வளங்களை அழிப்பதையும் நோக்கமாய்க் கொண்டு பா.ஜ.க அரசு காய் நகர்த்தி வருகிறது. ஹெச்.ராஜா மீண்டும் மீண்டும் தமிழர்களுக்கு எதிரான கருத்துக்களை பதிவிடுவது கூட மோடியும், அமித்ஷாவும் அளிக்கும் ஆதரவினால் தான்.

பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம் போன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் மட்டுமே அந்தந்த மாநிலங்களுக்கான சரியான பங்குநீரை பகிர்ந்தளிக்க முடியும். அவ்வாறு அமைக்கும் பட்சத்தில் மேலாண்மை வாரியத்தின் அனுமதியின்றி தடுப்பணைகளையோ அல்லது நீர்வளம் சார்ந்த திட்டங்களையோ நமக்கு எதிராக எந்த மாநிலமும் கொண்டுவர இயலாது. காவிரி வழக்கை கான்ஸ்டியூசனல்  பெஞ்சுக்கு( Constitutional bench) மீண்டும் கொண்டு சென்றால் மட்டுமே தமிழகத்திற்கு நீதி கிடைக்கும். இதற்காக உச்சநீதி மன்ற அவமதிப்பு வழக்கையும் சந்திக்க நான் தயார்" என்று பேசினார்.

முன்னதாக, இராகுல் காந்தி, ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை மன்னித்து விட்டதாகக் கூறியது குறித்துக் கேட்க, "ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை நான் மன்னித்து விட்டேன்' என காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியிருப்பது காயப்பட்ட இதயங்களுக்கு மருந்திடுவதாக அமைந்திருக்கிறது. ராஜீவ் காந்தி கொலை வழக்கு முற்றிலும் புனையப்பட்ட வழக்கு. மேலும் ஈழப்புலி பிரபாகரன் பற்றி அவர் கூறியிருப்பதும் மனதிற்கு ஆறுதல் அளிக்கிறது" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!