`குரங்கணி காட்டுத் தீ’ - பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஓ.பி.எஸ் ஆறுதல்!

தேனி மாவட்டம் போடியை அடுத்த குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்காகச் சென்றிருந்த மாணவ, மாணவிகள் காட்டுத் தீயில் சிக்கினர். 

ஓ.பி.எஸ்

கொழுக்குமலை செல்லும் வழியில் ஒத்தமலை என்ற பகுதியில் மலையேற்றப் பயிற்சியில் அவர்கள் ஈடுபட்டிருந்த போது காட்டுத் தீயில் சிக்கிக் கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்ற தகவல் தெரியாமல் இருந்த நிலையில், 27 பேர் சிக்கியிருக்கக் கூடும் என்று கூறப்பட்டது. இந்தநிலையில், காட்டுத் தீயில் சிக்கியிருந்த 7 மாணவிகள் மீட்கப்பட்டு போடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டனர். சிறிய அளவிலான காயங்களுடன் அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு வருகிறது. 

அவர்களிடம் விசாரித்ததில், சென்னை, ஈரோடு, சென்னிமலை மற்றும் திருப்பூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 36 பேர் குழுவாக மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டதாகத் தெரிவித்தனர். அவர்களில் 8 பேர் மாணவிகள் எனவும் தெரியவந்துள்ளது. மலைப்பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருபவரிடம் நாம் பேசியபோது, 5 பேர் தீக்காயங்களுடன் உயிரிழந்து விட்டதாகவும், மேலும் பலர் கடுமையான தீக்காயத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டவர்களை மீட்க மலைவாழ் மக்கள் உதவி வருகின்றனர். மீட்பு படைகளுடன் இணைந்து முதுவாக்குடி, டாப் ஸ்டேஷன், குரங்கணி பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் மீட்பு பணியில் அதிகளவில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, தீயில் சிக்கியுள்ளவர்களுக்கு தீக்காயம் அதிகம் இருக்கும் என்பதால் மீட்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, மீட்கப்பட்ட 9 பேருக்கு போடி அரசுமருத்துவமனையில் சிகிசிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில் சிறிய காயங்கள் உள்ளவர்களை தேனி அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. தேனி சுற்றுலா மாளிகையில் இன்று தங்க வைத்து பின் நாளை காலை அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பப்படுவார்கள். முன்னதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து துணை முதல்வர் ஓ.பி.எஸ், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் ஆறுதல் கூறினர். இதையடுத்து வெளியே வந்த அவர்களிடம், அடுத்தகட்ட மீட்பு நடவடிக்கை குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பினர். ஆனால் அவற்றுக்கு பதிலளிக்காமல் மூவரும் ஒரே காரில் ஏறி சென்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!