வெளியிடப்பட்ட நேரம்: 02:30 (12/03/2018)

கடைசி தொடர்பு:02:30 (12/03/2018)

கூடங்குளம் முதலாவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி!

கூடங்குளம் முதலாவது அணு உலையின் நீராவி கொதிகலன் வால்வில் ஏற்பட்ட பழுது காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது. இந்த அணு உலை அடுத்த சில தினங்களில் முழு கொள்ளவை எட்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

அணு உலையில் மின் உற்பத்தி

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்யாவின் ஒத்துழைப்புடன் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரு அணு உலைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த அணு உலைகளுக்கான கட்டுமானத்திலும், ரஷ்யாவிடம் இருந்து உதிரிப் பாகங்கள் கொள்முதல் செய்ததிலும் முறைகேடுகள் நடைபெற்றுதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த அணு உலைகளில் அடிக்கடி பழுது ஏற்படுவது அணு உலை எதிர்ப்பாளர்களை சந்தேகப்பட வைத்தது. 

கூடங்குளம் அணு உலையின் இரண்டாவது அலகில் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி திடீரென வால்வு பழுது ஏற்பட்டது. அதனைச் சரிசெய்யும் பணிகள் ரஷ்ய விஞ்ஞானிகளின் ஒத்துழைப்புடன் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், முதலாவது அணு உலையின் நீராவி கொதிகலன் வால்வில் ஏற்பட்ட திடீர் பழுது காரணமாக மார்ச் 8-ம் தேதி முதலாவது அணு உலையின் செயல்பாடு நிறுத்தப்பட்டது. 

ஏற்கெனவே இரண்டாவது அணு உலை, பழுது காரணமாக நிறுத்தப்பட்ட நிலையில் முதலாவது அணு உலையின் வால்வு பழுதடைந்து செயல்பாட்டை இழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இரு அணு உலைகளிலும் இருந்து தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய 1,124 மெகாவாட் மின்சாரம் கிடைப்பதிலும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் முதலாவது அணு உலையின் நீராவி கொதிகலன் வால்வில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணியில் விஞ்ஞானிகள் முழுவீச்சில் ஈடுபட்டு வந்தனர். 

அதனைத் தொடர்ந்து, கூடங்குளம் முதலாவது அணுஉலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. இந்த அணு உலையில் ஏற்பட்ட பிரச்னை முழுமையாக தீர்க்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதனால், இன்னும் இரு தினங்களில் இந்த அணு உலையானது அதன் முழு மின்உற்பத்தித் திறனான 1000  மெகாவாட் கொள்ளளவை எட்டும் எனவும் அணுமின் நிலைய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.