வெளியிடப்பட்ட நேரம்: 04:45 (12/03/2018)

கடைசி தொடர்பு:10:57 (12/03/2018)

`ஊழலை எதிர்த்த போதே அரசியலுக்கு வந்துவிட்டேன்' -  சகாயம் ஐ.ஏ.எஸ் பேச்சு!

ஊழலை எதிர்த்த போதே நான் அரசியலுக்கு வந்துவிட்டேன் என ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.

ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம்

நெடுஞ்சாலை படத்தின் ஹீரோ ஆரி "மாறுவோம், மாற்றுவோம்" என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் சார்பில் நேற்று சென்னை ஆழ்வார்பேட்டையில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில், ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம், நடிகர் சிவகார்த்திகேயன், விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், இயக்குநர்கள் மோகன் ராஜா, அமீர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய இயக்குநர் அமீர் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் அரசியலுக்கு வரவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். இதன்பின்னர் பேசிய, சகாயம் "சாதாரணமாக மதுரைக்கு வர வேண்டும், திருச்சிக்கு வர வேண்டும் என்பது போல அரசியலுக்கு வரச் சொல்லுகிறார்கள். அரசியலில் ஊழல் எவ்வளவு ஆழமாக வேரூன்றியுள்ளது என்று எனக்குத் தெரியும். இதை அறுத்தெறிய வேண்டும் என்றால் மாபெரும் வல்லமை உள்ளவர்காளால்தான் முடியும். அத்தகைய வல்லமையை சமூகத்திடமிருந்துதான் பெற முடியும். 

என்றைக்கு என் சமூகம் விழிப்படைகிறதோ, அன்றைக்கு வல்லமை அடையும். என்றைக்கு ஊழலை நான் எதிர்த்தேனோ அன்றிருந்தே அரசியலில் நான் இருக்கிறேன். ஊழலை எதிர்ப்பது வேறு. தேர்தல் அரசியல் வேறு. தேர்தல் அரசியலை இந்தச் சமூகம்தான் முடிவு செய்ய வேண்டும். தேர்தல் அரசியலை தாண்டி இந்தச் சமூகத்தில் விழிப்புஉணர்வு ஏற்படுத்த தொடர்ந்து பேசி வந்திருக்கிறேன். நான் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்தாலும் கூட ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளேன். எனினும், அரசியல் கட்சிகளோடு இணைந்து செயல்பட சாத்தியம் இல்லை" என்று கூறினார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க