`குரங்கணி காட்டுத் தீயில் சிக்கிய 27 பேர் மீட்பு' - தொடரும் மீட்புப் பணிகள்!

குரங்கணி காட்டுத் தீயில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை காட்டுத் தீயில் சிக்கிய 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 

குரங்கணி காட்டுத் தீ

தேனி மாவட்டம் போடியை அடுத்த குரங்கணி மலைப்பகுதியில் ட்ரெக்கிங் சென்றிருந்த மாணவ, மாணவிகள் காட்டுத் தீயில் சிக்கினர். கொழுக்குமலை செல்லும் வழியில் ஒத்தமலை என்ற பகுதியில் மலையேற்றப் பயிற்சியில் அவர்கள் ஈடுபட்டிருந்த போது காட்டுத் தீயில் சிக்கிக் கொண்டதாகத் தெரிகிறது. உள்ளூர் மக்கள் உதவியுடன் வனத்துறையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீஸார் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். முதலில் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்ற தகவல் தெரியாமல் இருந்த நிலையில், தற்போது தகவல் தெரியவந்துள்ளது. அதன்படி, இரு அணிகளாக மொத்தம் 39 பேர் ட்ரெக்கிங் சென்றுள்ளனர். இரண்டு பிரிவுகளாகச் சென்ற அவர்களில் சென்னையிலிருந்து 27 பேரும், ஈரோட்டிலிருந்து 12 பேரும், சென்றுள்ளனர். 

இவர்களில் நேற்று மாலையிலிருந்து இன்று காலை வரை 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட அனைவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களை, துணை முதல்வர் பன்னீர்செல்வம், வருவாய் அமைச்சர் உதயகுமார், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மூவரும் நள்ளிரவு 3 மணி வரை குரங்கணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்தனர். இதன்பின், சுமார்  3.50 மணியளவில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குரங்கணி வந்தார்.  

அவர் நம்மிடம் பேசும் போது, "கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து 3 ஹெலிகாப்டர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்படும். அதில் ஒன்று காட்டுத் தீயை அணைக்கவும், மீதமுள்ள இரண்டு ஹெலிகாப்டர்கள் காட்டுத் தீயில் சிக்கியுள்ளவர்களை மீட்கவும் பயன்படுத்தப்படும். மீட்கப்பட்ட 27 பேரும்  காயங்கள் அடிப்படையில் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதில், 6 பேர் தேனி அரசு மருத்துவமனைக்கும், 3 பேர் மதுரை அரசு மருத்துவமனைக்கும், மீதமுள்ளோர் தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளனர்" என்றார். 

வனத்துறையுடன் இணைந்து ஆயுதப்படையின் பயிற்சி காவலர்கள் 150-க்கும் மேற்பட்டோர் மலைகளில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் கோவை விமானப்படை தளத்திலிருந்து கருடா 1, கருடா 2 என்ற பெயரிடப்பட்டுள்ள இரண்டு அணிகள் மீட்புப் பணிக்காக குரங்கணி வந்துள்ளன. இவற்றில் ஓர் அணி மீட்புப் பணிக்காகவும், மற்றொரு அணி மருத்துவ உதவிக்காகவும் வந்துள்ளனர். மேலும், ஒரு ஹெலிகாப்டரும் சம்பவ இடத்துக்கு வந்துள்ளது. இதனால் மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, தீயில் சிக்கி 8 பேர் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!