வெளியிடப்பட்ட நேரம்: 10:27 (12/03/2018)

கடைசி தொடர்பு:10:59 (12/03/2018)

``பாக்யராஜ், டி.ராஜேந்தர் கதிதான் ரஜினிக்கும்" - அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார்

ரே நாளில், காலை-மாலை-இரவு என எந்நேரத்திலும் அ.தி.மு.க-வின் அறிவிப்பாளராக பரபர செய்திகளைக் கொடுத்துக்கொண்டிருப்பவர் அமைச்சர் ஜெயக்குமார். அதனாலேயே எதிர்க்கட்சியினர் மட்டுமன்றி, அ.தி.மு.க எதிர் அணியினரின் கடும் வசவுகளுக்கும் ஆளாகுபவர். 

தற்போதைய தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் பேசினோம்....  

''சூப்பர் முதல்வர், முந்திரிக்கொட்டை, கோமாளி, காமெடி நடிகர் என்றெல்லாம் உங்கள்மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படுகிறதே....?''

''கட்சியின் மூத்த உறுப்பினர் நான். அ.தி.மு.க கட்சி மற்றும் ஆட்சியைத் தாக்க வருகிற பந்துகளை தடுப்பதுதான் என்னுடைய வேலை. என்னைப் பற்றி வரும் விமர்சனங்களைத் தாங்கிக்கொள்ளும் பக்குவம் எனக்கு உண்டு; நானாக யாரையும் தாக்குவது கிடையாது. 
என்னுடைய காலை இன்னொருவர் மிதிக்கும்போது பதிலுக்கு நானும் அவரது காலை மிதிக்கப்போவதில்லை; ஆனாலும் ரியாக்ட் செய்துதானே ஆகவேண்டும்... அரசியல் ரீதியாக யார் எந்தக் கேள்வியைக் கேட்டாலும் பதில் சொல்வது என்னுடைய கடமை.... உரிய முறையில் பதில் அளிக்கும் பக்குவமும் என்னிடம் இருக்கிறது. எதிரில் இருப்பவர்களிடமும் இந்தப் பக்குவம் இருந்தால் இதுபோன்ற வார்த்தைகள் வராது.... பிரச்னையும் இல்லை.''

'' 'அ.தி.மு.க-வில் 70 எம்.எல்.ஏ-க்கள் தினகரனுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். எனவே தினகரன் தனிக்கட்சி ஆரம்பிக்கத் தேவையில்லை' என்று புகழேந்தி சொல்லியிருக்கிறாரே....?''

''ஆர்.கே.நகரில், டோக்கன் கொடுத்து மக்களை ஏமாற்றி தற்காலிக வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள். 'ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் ஒன்று சேர்ந்துவிட்டால், நான் அரசியலில் இருந்து விலகிக்கொள்கிறேன்' என்று அறிவித்தவர்தான் தினகரன். ஏன் இன்னும் விலகவில்லை? அவருக்கு வார்த்தை சுத்தம் கிடையாது. ஊரை அடித்து உலையில் போட்டு கொள்ளையடித்த எண்ணம் அவரது ரத்தத்தில் ஊறிக் கிடக்கிறது. அவ்வளவு சீக்கிரத்தில் அது போகாது. அதிகார போதை, பண வெறி கொண்ட மனிதனுக்கு அவ்வளவு சீக்கிரம் தூக்கம் வராது. அப்படித்தான் டி.டி.வி தினகரனும் ஏதேதோ பிதற்றிக் கொண்டிருக்கிறார். அவரைச் சுற்றி இருக்கிற நாலுபேரும் ஓடாமல் இருக்கவேண்டும். அதற்காக எதையாவது சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்''

டி.டி.வி தினகரன்

''ஆர்.கே.நகரில், மதுசூதனன் தோல்வியை ஜெயக்குமாரே பார்த்துக்கொள்வார். நாங்கள் எதுவும் செய்யவேண்டியதில்லை என்று டி.டி.வி தரப்பினர் சொன்னதுபோலவே ஆகிவிட்டதே...?''

''கட்சிக்கு கிடைக்கவேண்டிய வாக்குகள் அனைத்தும் கிடைத்துவிட்டன. ஆனால், தேர்தலுக்கு முந்தைய நாள் அப்பாவி மக்களிடம் டோக்கன் கொடுத்து கிரிமினல் வழியில் தற்காலிக வெற்றியை தினகரன் பெற்றுவிட்டார். ஏற்கெனவே, நன்றி சொல்லப்போன இடத்தில், மக்களெல்லாம் டோக்கனைக் காட்டி 'பத்தாயிரம் ரூபாய் கொடு' என்று கேட்டு... ஒரே கலவரமாகிவிட்டது. அதனால்தான் தொகுதிப் பக்கம் நன்றி சொல்லக்கூடப் போகமுடியாமல் இருக்கிறார். இந்த விஷயங்களெல்லாம் மதுசூதனனுக்கும் நன்றாகத் தெரியும். மற்றபடி மதுசூதனன், கட்சித் தலைமையிடம் கடிதம் கொடுத்திருக்கிறாரா, கொடுக்கவில்லையா... என்பதுகூட எனக்குத் தெரியாது. எனவே தெரியாத விஷயத்தைப்பற்றிப் பேசவேண்டாம்.... விட்டுவிடுங்கள்''

''டி.டி.வி தினகரன் 10 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து சேர்த்தது எப்படி?' என்று கேள்வி கேட்கிறீர்கள். யாருடைய ஆட்சியின்போது டி.டி.வி தினகரன் முறைகேடாக சொத்து சேர்த்தார்?''

''ஜெயலலிதா, நேர்மையான அரசியல்வாதி. அவரது கவனம் முழுவதும், மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்பதில் மட்டுமே இருக்கும். ஆனால், அவருக்குப் பின்னால் இருந்துகொண்டு இந்தக் குடும்பம் என்ன செய்தார்கள்.... ஏது செய்தார்கள் என்றெல்லாம் எனக்குத் தெரியவில்லை. இன்றைக்கு இவர்களது சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 10 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டி இருக்கிறது. இதைத்தான் நான் குறிப்பிட்டேன். இவ்வளவு பெரிய தொகை இவர்களுக்கு எந்த வழியில் வந்தது என்பதையெல்லாம் வருமான வரித்துறைதான் விசாரிக்கவேண்டும்!'' 

ரஜினிகாந்த்

''சமீபகாலமாக பி.ஜே.பி தலைவர்கள் தொடர்ந்து தமிழக அரசை விமர்சித்து வருகிறார்களே...?''

''மதம், ஜாதி, இனக்கலவரம் இல்லாத அமைதிப்பூங்காவாக தமிழகம் இருந்துவருகிறது. தொழிற்வளர்ச்சி நல்ல முறையில் நடைபெற்றுவருகிறது. ஆனாலும் தங்களது கட்சியை தமிழகத்தில் வளர்க்கவேண்டும் என்ற எண்ணத்தில் பி.ஜே.பி-யினர், தமிழக அரசு மீது பொய்யானக் குற்றச்சாட்டுகளை கூறிவருகிறார்கள். நாங்களும் உடனுக்குடன் அந்தப் பொய்க் குற்றச்சாட்டுகளை மறுத்துப் பதில் கொடுத்துவருகிறோம்.''

''ஆளுநர் ஆய்வைத் தடுக்கவேண்டிய ஆளும் கட்சி வரவேற்பு கொடுப்பதும், ஆளுநருக்கு எதிராக எதிர்க்கட்சியினர் கருப்புக்கொடி காட்டுவதும் என்ன மாதிரியான அரசியல்?"

''ஆளுநர் என்பவரும் அரசாங்கத்தினுடைய ஓர் அங்கமாகத்தான் இருக்கிறார். டெண்டர் அல்லது நிர்வாகப் பொறுப்பு என்பதெல்லாம் அவருடைய பெயரில்தான் வரும். அந்தவகையில்தான் ஆளுநர் தமிழகத்தைப் பார்வையிடுகிறார். அவரும்கூட ஆட்சியைப் பற்றியோ நிர்வாகத்தைப் பற்றியோ தப்பாக எதுவும் கூறவில்லையே... மாறாக, 'தமிழகத்தில், சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்கிறது... அமைதி தவழும் மாநிலமாகத் திகழ்கிறது. அதிகாரிகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கிறது' என்றெல்லாம்தானே சொல்லியிருக்கிறார். இதனை அரசுக்குக் கிடைத்திருக்கிற அங்கீகாரமாகவும் பாராட்டாகவும்தானே பார்க்கவேண்டும். தேவையில்லாமல் அவரை ஏன் எதிர்க்கவேண்டும்?''

''மத்திய அரசோடு இணக்கமாக செயல்படுவதாகச் சொல்கிறீர்கள். ஆனால், மீனவர் பிரச்னை, ஒகி புயல் நிவாரண நிதி போதிய அளவில் கிடைக்காதது, காவிரிப் பிரச்னை... எனத் தொடர்ந்து தமிழகம் வஞ்சிக்கப்பட்டு வருகிறதே....?''

''ஒகி புயல் முதற்கட்ட நிவாரணமாக 133 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார்களே....''

கமல்ஹாசன்

''10 ஆயிரம் கோடி ரூபாய் கேட்ட இடத்தில், 133 கோடி ரூபாய் என்பது மிகச் சிறிய தொகையல்லவா?''

''அது நீண்டகாலத் திட்டமாக கிடைக்கவிருக்கிறது. இப்போது உடனடி நிவாரணத்துக்காக 133 கோடி ரூபாய் வந்துள்ளது. அடுத்தடுத்து அவர்களது மறுவாழ்வு நடவடிக்கைக்குத் தேவையான உதவிகளும் வந்து சேரும். மற்ற மாநிலங்களைவிடவும் நமது மாநிலத்தில் திறமையான அதிகாரிகளும் அரசாங்கமும் இருப்பதால், மற்ற திட்டங்களுக்கான நிதியும் கோரப்பட்டுள்ளது. அவையும் அடுத்தடுத்து கிடைக்க ஆரம்பிக்கும்போது, தமிழகத்தின் அடிப்படைத் தேவை அனைத்தும் பூர்த்தியாகிவிடும்''

''ஆனால், தமிழகத்தில் 'சரியான தலைமை இல்லை' என்று ரஜினி பேசியிருக்கிறாரே....?'' 

''அவர் கட்சி ஆரம்பிக்க இருப்பதால் அப்படித்தான் பேசுவார். யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால், மக்கள்தான் அங்கீகாரம் கொடுக்கும் இடத்தில் இருக்கிறார்கள்.''

''அதே மேடையில் எம்.ஜி.ஆரைப் புகழ்ந்து பேசியிருக்கிறாரே?''

''எம்.ஜி.ஆர் இன்டர்நேஷனல் ஃபிகர். அவர் பெயரை ஏற்கெனவே பயன்படுத்திய நடிகர் பாக்யராஜ், டி.ராஜேந்தர் எல்லாம் அரசியலில் வெற்றி பெறவில்லை... எம்.ஜி.ஆரின் பெயரும் புகழும் அவர் உருவாக்கிய அ.தி.மு.க-வுக்கு மட்டும்தான் வெற்றியைப் பெற்றுத்தரும். ஊர்க்குருவிகள் ஒருநாளும் பருந்து ஆகமுடியாது!''

''ரஜினி, கமல் இருவரில் யார் பெஸ்ட்? ஏன்?"

''சினிமா என்பது பொழுதுபோக்கு.... அந்த வகையில், திரைப்படங்களில் நடிக்கிற எல்லோரையுமே எனக்குப் பிடிக்கும். ரஜினி, கமலையும் திரையில் பிடிக்கும். ஆனால், அரசியலுக்குள் வரும் அவர்கள் தங்களது கட்சிக் கொள்கைகளை எடுத்துச் சொல்லாமல், எங்களைத் தாக்கும் விதமாகப் பேசிவரும்போது, நாங்களும் பதில் தாக்குதல் செய்யத்தான் வேண்டியிருக்கிறது. 
எங்களைப் பொருத்தவரையில், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவரும் எங்களுக்குத் தெய்வம்; எனவேதான் அவர்களிருவரையும் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறோம். அதற்காக, ரஜினி - கமலை எல்லாம் எங்கள் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாட மாட்டோம்!''


டிரெண்டிங் @ விகடன்