`கணவன் அடித்தால் பெண்கள் திருப்பி அடியுங்கள்!' - கிரண்பேடி ஆவேசம்

”கணவன் அடித்தால் பெண்கள் திருப்பி அடிக்க வேண்டும்” எனப் புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மகளிர் தினவிழாவில் ஆவேசமாகப் பேசியிருக்கிறார்.

கிரண்பேடி

புதுச்சேரி, காரைக்கால், அம்பகரத்தூர் ஸ்ரீ பத்ர காளியம்மன் கோவில் வளாகத்தில், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்குத் தலைமை தாங்கிய துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பள்ளிப் படிப்பில் சிறந்த சாதனை படைத்த மாணவிகள் மற்றும் சிறப்பாகப் பணி புரிந்த அங்கன்வாடி ஊழியர்களுக்குப் பரிசுகளை வழங்கினார்.

அப்போது பேசிய அவர், ”பெண்கள் அரசு வேலையை மட்டும் நம்பி இருக்காமல் தங்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் சுயதொழிலை செய்வதற்கு முன் வரவேண்டும். அதேபோல், அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அவரவரின் கடமைகளைச் சிறப்பாகச் செய்து மாநில வளர்ச்சிக்காகப் பாடுபட வேண்டும். இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக புதுவையைக் கொண்டு வருவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். நல்ல வருவாய் இருப்பவர்கள் தங்களை ஏழையென்று கூறி அரசின் உதவிகளைப் பெறக் கூடாது. அரசின் உதவிகள் உண்மையான ஏழைகளுக்கு மட்டுமே சென்று சேர வேண்டும். அரசுத்துறை அதிகாரிகள் இதில் கவனமுடன் செயல்பட வேண்டும். சமுதாயத்தில் பெண்கள் எதற்கும் சளைத்தவர்கள் கிடையாது.

தங்களிடம் இருப்பதை வைத்துக்கொண்டு சமுதாயத்தில் முன்னேற முன்வரவேண்டும். வீட்டில் கணவன்மார்கள் பெண்களை அடித்துத் துன்புறுத்தினால், அவர்களுக்கு  அடங்கிப் போகக்கூடாது. கொஞ்சமாவது எதிர்ப்புகளைக் காட்டி அவர்களை திருப்பி அடிக்க வேண்டும். அப்போதுதான் பெண்களுக்கு எதையும் எதிர்கொள்ளும் துணிவு வரும். பெண்கள் வேலை வெறுமனே தேடுபவர்களாக மட்டும் இல்லாமல் பலருக்கு வேலை வாய்ப்பினை தருமளவிற்கு முன்னேற வேண்டும். குழந்தைகளின் கல்வி் விஷயங்களில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும். புதுவையில் நிதிப் பற்றாக்குறை உள்ளது. அண்மையில் புதுச்சேரிக்கு வருகை தந்த பிரதமரிடம் இதுகுறித்து நான் பேசியிருக்கிறேன். புதுச்சேரிக்கு விரைவில் நிதி வரும். நானும் ஒவ்வொரு நொடியும் புதுவை மாநில வளர்ச்சிக்காகப் பாடுபடுவேன்” என்று தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!