வெளியிடப்பட்ட நேரம்: 09:33 (12/03/2018)

கடைசி தொடர்பு:16:47 (12/03/2018)

குரங்கணி காட்டுத்தீ! - ட்ரெக்கிங் வந்த புதுமணத் தம்பதி உயிரிழந்த சோகம் #KuranganiForestFire #LiveUpdates

குரங்கணி காட்டுத் தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. சென்னை வேளச்சேரியை சேர்ந்த நிஷா சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். 

குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்த இருவர் ஈரோட்டைச் சேர்ந்த புதுமணத் தம்பதி என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.  ஈரோட்டைச் சேர்ந்த புதுமணத் தம்பதி திவ்யா-விவேக் ஆகியோருக்கு திருமணம் முடிந்து மூன்றரை மாதங்களே ஆகிறது. துபாயில் இருந்த விவேக் கடந்த மார்ச் 1-ம் தேதி நாடு திரும்பியுள்ளார். சொந்த நாட்டுக்கு வந்த கையோடு தன் மனைவியுடன் ட்ரெக்கிங் சென்றுள்ளார். மலேயேற்றத்துக்கு முன்பு, விவேக் தன் ஃபேஸ்புக் பக்கத்தில், கொழுக்குமலை பகுதிக்கு ட்ரெக்கிங் செல்வதாக  புகைப்படத்துடன் மகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

குரங்கணி காட்டுத்தீ

குரங்கணி தீ விபத்தில் மீட்கப்பட்டவர்கள் மதுரை அரசு மருத்துவமனை உட்பட அப்பல்லோ, மீனாட்சி மிஷன் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான சிகிச்சை வசதிகளை துரிதப்படுத்த மதுரை கலெக்டர் வீரராகவராவ் மருத்துவமனையில் இருக்கிறார்.

குரங்கணி காட்டுத்தீ

தேனி ஆட்சியர் பல்லவி பல்தேவ் பேசுகையில் ‘குரங்கணி காட்டுத்தீயிலிருந்து இதுவரை 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களில் 10 பேருக்கு எந்தக் காயமும் இல்லை. 17 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர். மாவட்ட நிர்வாகம், போலீஸார், தீயணைப்புப் படையினர் விரைந்து செயல்பட்டும் 9 பேரை காப்பாற்ற முடியவில்லை.

 தீ விபத்தை பார்த்து பதற்றப்பட்டு ஓடியதால், 9 பேர் பள்ளத்தில் விழுந்து தப்பிக்க முடியாமல் உயிரிழந்தனர். உயிரிழந்த 9 பேரின் சடலங்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மீட்புப் பணிகளில் இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன’ என்றார். 

தேனி ஆட்சியர்
 

*ஈரோட்டைச் சேர்ந்த விஜயா, விவேக், தமிழ்ச்செல்வி ஆகியோர் உயிரிழந்துள்ளனர். 

*சென்னையைச் சேர்ந்த அகிலா, பிரேமலதா, புனிதா, சுபா, அருண், விபின் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். 

*குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி சென்னை மற்றும் ஈரோட்டை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தாக தேனி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 4 பெண்கள், 4 ஆண்கள் மற்றும் ஒரு சிறுவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. மேலும், 8 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

*உயிரிழந்தவர்களில் 6 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். 3 பேர் ஈரோட்டை சேர்ந்தவர்கள். 

*காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்த விபின் என்பவரின் உடல் மலைப்பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. அவர் கோவை கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. 

 

குரங்கணி காட்டுத்தீ

குரங்கணி காட்டுத் தீயில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை காட்டுத் தீயில் சிக்கிய 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 

தேனி மாவட்டம் போடியை அடுத்த குரங்கணி மலைப்பகுதியில் ட்ரெக்கிங் சென்றிருந்த மாணவ, மாணவிகள் காட்டுத் தீயில் சிக்கினர். கொழுக்குமலை செல்லும் வழியில் ஒத்தமலை என்ற பகுதியில் மலையேற்றப் பயிற்சியில் அவர்கள் ஈடுபட்டிருந்த போது காட்டுத் தீயில் சிக்கிக் கொண்டதாகத் தெரிகிறது. உள்ளூர் மக்கள் உதவியுடன் வனத்துறையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீஸார் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். முதலில் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்ற தகவல் தெரியாமல் இருந்த நிலையில், தற்போது தகவல் தெரியவந்துள்ளது. அதன்படி, இரு அணிகளாக மொத்தம் 39 பேர் ட்ரெக்கிங் சென்றுள்ளனர். இரண்டு பிரிவுகளாகச் சென்ற அவர்களில் சென்னையிலிருந்து 27 பேரும், ஈரோட்டிலிருந்து 12 பேரும், சென்றுள்ளனர். 

குரங்கணி காட்டுத்தீ

இவர்களில் நேற்று மாலையிலிருந்து இன்று காலை வரை 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட அனைவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களை, துணை முதல்வர் பன்னீர்செல்வம், வருவாய் அமைச்சர் உதயகுமார், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மூவரும் நள்ளிரவு 3 மணி வரை குரங்கணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்தனர். இதன்பின், சுமார் 3.50 மணியளவில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குரங்கணி வந்தார்.  

குரங்கணி காட்டுத்தீ

அவர் நம்மிடம் பேசும்போது, "கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து 3 ஹெலிகாப்டர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்படும். அதில் ஒன்று காட்டுத் தீயை அணைக்கவும், மீதமுள்ள இரண்டு ஹெலிகாப்டர்கள் காட்டுத் தீயில் சிக்கியுள்ளவர்களை மீட்கவும் பயன்படுத்தப்படும். மீட்கப்பட்ட 27 பேரும்  காயங்கள் அடிப்படையில் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதில், 6 பேர் தேனி அரசு மருத்துவமனைக்கும், 3 பேர் மதுரை அரசு மருத்துவமனைக்கும், மீதமுள்ளோர் தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளனர்" என்றார். 

வனத்துறையுடன் இணைந்து ஆயுதப்படையின் பயிற்சி காவலர்கள் 150-க்கும் மேற்பட்டோர் மலைகளில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் கோவை விமானப்படை தளத்திலிருந்து கருடா 1, கருடா 2 என்ற பெயரிடப்பட்டுள்ள இரண்டு அணிகள் மீட்புப் பணிக்காக குரங்கணி வந்துள்ளன. இவற்றில் ஓர் அணி மீட்புப் பணிக்காகவும், மற்றொரு அணி மருத்துவ உதவிக்காகவும் வந்துள்ளனர். மேலும், ஒரு ஹெலிகாப்டரும் சம்பவ இடத்துக்கு வந்துள்ளது. இதனால் மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, தீயில் சிக்கி 8 பேர் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க