`போக்குவரத்து விதிகளை மீறிச்செல்லும் வாகனங்களை நிறுத்த வேண்டாம்!’ - கிரண்பேடி அட்வைஸ்

``போக்குவரத்து விதிகளை மீறிச்செல்லும் வாகனங்களை நிறுத்த வேண்டாம்” என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

கிரண்பேடி

புதுச்சேரி காவலர் பயிற்சிப் பள்ளியில் புதுச்சேரி போக்குவரத்துக் காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கான விழிப்பு உணர்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, “போக்குவரத்துப் போலீஸார் தங்கள் கடமைகளைச் செய்ய தொழில்நுட்பத்தை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். நீங்கள் அனைவரும் ஒரு வாட்ஸ் அப் குழுவில் இணைக்கப்பட்டுள்ளீர்கள்.

இந்த குரூப்பில் நாள்தோறும் சட்டப்பிரிவு குறித்த விவரங்களை இன்ஸ்பெக்டர் அனுப்ப வேண்டும். போக்குவரத்து போலீஸார் சட்டங்களைப் பற்றி தெரிந்துகொள்ள அது உதவியாக இருக்கும். போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் நேரத்தில் சீரமைப்புக்கு முக்கியத்துவம் தர வேண்டும். போக்குவரத்து விதிகளை மீறிச்செல்லும் வாகனங்களை நிறுத்த வேண்டாம். அதற்கு பதிலாக புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து விதிமீறல் குறித்து அவருக்குப் புகார் அனுப்புங்கள். பின்னர், போக்குவரத்து விதிமீறல் குறித்து அவர் மீது நீதிமன்ற நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுங்கள்.

சிக்னல்களில் கேமராக்கள் பொருத்துவதற்கு நிதி கிடைக்கும் வரை உங்களது செல்போன்களில் போக்குவரத்து விதிமீறல் குறித்து பதிவு செய்யுங்கள். தினமும் காலை 8 மணிக்கு அனைத்து சிக்னல்களிலும் விதிமீறல் குறித்து வீடியோவாகப் பதிவு செய்ய வேண்டும். உயர் அதிகாரிகள் தினமும் காலை சிக்னல் பகுதிகளுக்குச் சென்று போக்குவரத்தைச் சீரமைக்க திட்டமிட்டு பணியாற்ற வேண்டும்” என்று தெரிவித்தார்.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!