வெளியிடப்பட்ட நேரம்: 12:45 (12/03/2018)

கடைசி தொடர்பு:16:04 (02/07/2018)

`என்னுடைய முடிவை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை' - நிர்மலாவின் கணவர் வாக்குமூலம்

``நிர்மலா தூக்குப்போட்டு இறந்தாள் என்று சொல்வது பொய். மற்றொரு திருமணம் செய்துகொள்வதற்காக அவளின் கணவனே கொலை செய்து தூக்கில் மாட்டிவிட்டு நாடகம் செய்கிறார் என்று  நாங்கள் சந்தேகப்படுகிறோம். ஆகவே, நடேசனை போலீஸார் கைது செய்ய வேண்டும்" என்று ஆவேசம் பொங்க நிர்மலாவின் உறவினர்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் கூழையன்காட்டில்  பரபரப்பும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

நிர்மலாவின் கணவர் வாக்குமூலம்

புதுக்கோட்டை  மாவட்டம், ஆலங்குடி அருகில் கூழையன்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் நடேசன். இவரின் மனைவி நிர்மலா. நடேசன் அரசுப் பள்ளியில் ஆசிரியராக வேலைபார்த்து வருகிறார். இவர்களுக்குத் திருமணமாகி 11 ஆண்டுகளாகியும்  குழந்தை இல்லை. `குழந்தையின்மைக்குக் காரணம் நீதான்' என்று கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி சண்டையிட ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த சிறிய சண்டை வளர்ந்து பெரிதாகியிருக்கின்றன. இந்தநிலையில், நடேசன் இன்னொரு திருமணம் செய்துகொள்வதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறார். இதையறிந்து நிர்மலா மனம் உடைந்துபோனார். கடந்த சில நாள்களாகப் பித்துப் பிடித்தவராக நிர்மலா காணப்பட்டிருக்கிறார். உறவினர்கள் வீட்டுக்கு வந்து சமாதானம் கூறிச் சென்றிருக்கிறார்கள். இந்தநிலையில், கடந்த 10.2.2018 அன்று காலை நிர்மலா அவரது வீட்டில் இறந்த நிலையில் கிடந்திருக்கிறார்.

நிர்மலாவின் உறவினர்கள் மறியல்

"வீட்டில் யாரும் இல்லாத நேரமாகப் பார்த்து, நிர்மலா தூக்குக்போட்டு தற்கொலை செய்துகொண்டார். குழந்தையின்மைக் காரணமாக எங்களுக்குள் சமாதானம் இல்லை. இன்னொரு திருமணம் செய்துகொள்ளும் முடிவில் நான் இருப்பதை அவளிடம் கூறினேன். என்னுடைய முடிவைத் தாங்கிக்கொள்ள முடியாமல் மனமுடைந்து என் மனைவி தற்கொலை செய்துகொண்டார்" என்று கணவர் நடேசன் போலீஸ் விசாரணையில் கூறியிருக்கிறார். ஆனால், அவர் கூறுவதில் உண்மை இல்லை. வரதட்சணை கேட்டு அடிக்கடி நிர்மலாவை நடேசன் கொடுமை செய்திருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே பிரச்னைகள் அடிக்கடி நிகழ்வது உண்டு. நடேசன் இன்னொரு திருமணம் செய்துகொள்வதற்காக  நிர்மலாவிடம் விவாகரத்து பெற முயன்றார். அதற்கு அவள் சம்மதிக்கவில்லை. இதனால், நடேசனே நிர்மலாவைக் கொன்று இருப்பாருன்னு  நாங்க சந்தேகப்படுகிறோம். அவரை போலீஸார் கைது செய்ய வேண்டும்" என்று கூறி, நிர்மலாவின் உறவினர்களும் ஊர்க்காரர்களும் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். தவிர, நிர்மலாவின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக ஆலங்குடி போலீஸில் புகாரும் அளித்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.