வெளியிடப்பட்ட நேரம்: 12:25 (12/03/2018)

கடைசி தொடர்பு:12:25 (12/03/2018)

ஒன்றரை லட்சத்துக்கு விலைபோன `கிளிமூக்கு விசிறிவால்' - பிரமிக்கவைத்த சேவல் கண்காட்சி

அழியும் நிலையில் உள்ள அசில் உள்ளிட்ட இந்தியச் சேவல் இனங்களைப் பாதுகாக்கும் வகையில் திண்டுக்கல்லில் ஆண்டுதோறும் நடைபெறும் தேசிய அளவிலான சேவல் கண்காட்சி நேற்று தொடங்கியது. திண்டுக்கல்-வத்தலகுண்டு சாலையில் குட்டியபட்டி அருகே தனியாருக்குச் சொந்தமான தோட்டத்தில் நடைபெற்றது.

சேவல் கண்காட்சி

இந்தக் கண்காட்சியில் மகாராஷ்டிரா, ஆந்திரா, கேரளா, கர்நாடக உள்ளிட்ட வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் துபாய், சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர். சுமார் 500 சேவல்கள் பங்கேற்றன. கிளிமூக்கு விசிறிவால், செவலை, கீரி, மயிலை, செம்பொன், கருங்கீரி, செங்கீரி, வல்லூறு, மயிலை, பூதி, வெள்ளைகொக்கு, காகம், எண்ணெய் கருப்பு என வகை வகையான சேவல்களை ஒரே இடத்தில் கண்ட சேவல் பிரியர்கள் ஆர்வமுடன் அனைத்துச் சேவல்களையும் பார்வையிட்டதும், சேவல்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

சேவல் கண்காட்சி

இதில், சேவல் குஞ்சுகள் விற்பனைக்கு வைத்திருந்தனர். ஒரு மாதமான குஞ்சுகள் ஜோடி குறைந்தபட்சம் 2,500 ரூபாய் முதல் அதிகபட்சம் 20 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. பெரிய சேவல்கள் வயதுக்கு ஏற்ப 40 ஆயிரம் முதல் ஒன்றரை லட்ச ரூபாய் வரை விற்பனையானது. சேவலின் மூக்கு, நிறம், வாலின் அமைப்பு, கால் அமைப்பு போன்றவற்றின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கிறார்கள். கண்காட்சியில் பங்கேற்ற சிறந்த சேவல்களுக்குக் கேடயமும், பரிசுகளும் வழங்கப்பட்டன. ''இந்திய ரகமான அசில் சேவல்களில் மூக்கு கிளிபோலவும், வால் விசிறி போலவும் உள்ள கிளி மூக்கு, விசிறி வால் சேவல்கள்தான் அதிக விலைக்கு விற்பனையாகின. இந்த ரக சேவல்களுக்கு வெளிநாடுகளில் நல்ல மவுசு இருக்கிறது'' என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பிரபாத் கூறினார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க