குரங்கணி காட்டுத்தீ : மீட்கப்பட்ட 15 பேருக்கு மதுரையில் சிறப்பு சிகிச்சை

தேனி மாவட்டம், குரங்கணி மலைப்பகுதியிலுள்ள வனத்தில் கடந்த இரண்டு நாள்களாக தீ எரிந்துகொண்டிருந்த நிலையில், அங்கு டிரெக்கிங் சென்ற சென்னையைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர்கள், பள்ளி மாணவிகள் நேற்று மாலை காட்டுத்தீக்குள் சிக்கிக்கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ள நிலையில் இரவு முழுவதும் மீட்புப் பணி நடைபெற்றது. இதுவரை ஒன்பது பேர் இறந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

குரங்கணி தீ விபத்து


மீட்கப்பட்டவர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு தீக்காய சிகிச்சைக்கான வசதிகள் மிகவும் குறைவாக உள்ளதால் இன்று காலை மதுரைக்குக் கொண்டு வரப்பட்டனர். மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் 9 பேரும், கெனட் மருத்துவமனையில் 3 பேரும், மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் ஒருவரும் அப்போலோவில் 2 பேரும் என்று 15 பேருக்கு மதுரையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கான சிறப்பு சிகிச்சைகளை, தமிழக அரசின் சுகாதாரச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் உத்தரவின் பேரில் அனைத்து மருத்துவமனைகளும் செய்து வருகின்றன. மேலும், பாதிக்கப்பட்டவர்களை மதுரையிலுள்ள தீக்காயச் சிகிச்சைக்கான வசதிகள் நிறைந்த தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இன்று மாலை தேனிக்கு வருகை தர உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாதிக்கப்பட்டவர்களை காண மதுரைக்கும் வரலாம் என்று கூறப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!