வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (12/03/2018)

கடைசி தொடர்பு:13:50 (12/03/2018)

விசாரணை ஆணையத்தில் சசிகலா பிரமாணப் பத்திரம் தாக்கல்! பூங்குன்றனின் கோரிக்கை நிராகரிப்பு

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன், சசிகலா தரப்பில் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

சசிகலா

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சர்ச்சை எழுந்த நிலையில், தமிழக அரசு சார்பில், ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. சென்னை எழிலக வளாகத்தில் செயல்படும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன், தீபா, தீபக் ஜெயக்குமார் உள்ளிட்ட ஜெயலலிதாவின் ரத்தச் சொந்தங்கள், சசிகலா-வின் மன்னார்குடி சொந்தங்கள், அரசு அதிகாரிகள், ஜெயலலிதாவிற்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் என அனைவரிடமும், ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. 

இந்நிலையில், சிறையில் இருக்கும் சசிகலாவிடம் விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் அழைப்பு விடுத்திருந்தது. அதற்கு, சசிகலா சார்பில் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜராகி, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.

பூங்குன்றன்

மேலும், கடந்த பிப்., மாதம் 6 ம் தேதி அன்று, விசாரணை ஆணையத்தின் முன், ஜெயலலிதா மரணம் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளித்த 22 பேரில் சாட்சியங்களுடன், அவர்கள் அளித்த ஆவணங்களையும் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை அடங்கிய புதிய மனு ஒன்று சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. ஜெலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றனும், விசாரணை ஆணையத்தின் முன் நேரில் ஆஜராக விலக்குக் கேட்டு மனு அளித்தார். அந்த மனுவை, விசாரணை ஆணையம் நிராகரித்துள்ளது. இந்நிலையில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் பிரமாணப் பத்திரங்களை சசிகலா தரப்பு தாக்கல் செய்தது.