வனத்துறையின் அலட்சியமே உயிரிழப்புக்குக் காரணம்! - டி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டு

காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு வனத்துறையினரின் அலட்சியமே காரணம் என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம், குரங்கணி மலைப்பகுதியிலுள்ள வனத்தில் கடந்த இரண்டு நாள்களாகத் தீ எரிந்துகொண்டிருந்த நிலையில், அங்கு டிரெக்கிங் சென்ற சென்னையைச் சேர்ந்த ஐ.டி ஊழியர்கள், பள்ளி மாணவிகள் நேற்று மாலை காட்டுத்தீக்குள் சிக்கிக்கொண்டனர். இரவு முழுவதும் மீட்புப் பணி நடைபெற்றது. இதுவரை 9 பேர் இறந்துள்ளனர் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 27 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள டி.டி.வி.தினகரன், மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 9 பேர் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்துள்ளது, மிகுந்த மனவேதனை அளிக்கின்றது. அவர்களது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, தீக்காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருபவர்கள் விரைவில் நலம்பெற இறைவனை வேண்டுகிறேன். 

போடி மேற்குத்தொடர்ச்சி மலை வனப்பகுதியில், கடந்த 15 நாள்களுக்கும் மேல் ஏற்பட்ட காட்டுத் தீ தொடர்ந்து எரிந்து வருகின்ற நிலையில், உரிய முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிடாமலும், மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டோரை தமிழக அரசின் வனத்துறை தடுக்காமலும் அலட்சியமாக இருந்ததே இந்த உயிரிழப்புகளுக்குக் காரணம். இனி மலையேற்றப் பயிற்சிக்கு அனுமதிக்கப்படுபவர்களுக்கு,  
விதிமுறைகள் மற்றும் அனுமதிகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!