வெளியிடப்பட்ட நேரம்: 13:11 (12/03/2018)

கடைசி தொடர்பு:13:13 (12/03/2018)

10 பேருக்கு மேல் 70% முதல் 100% தீக்காயம்! உறவினர்களுக்கு உதவ தகவல் மையம் #KuranganiForestFire

குரங்கணி தீ விபத்தில் சிகிச்சை பெறுபவர்கள் தொடர்பான தகவல் பெற மதுரை அரசு மருத்துவமனையில் தனி மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

தகவல் மையம்

தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மலையேறும் பயிற்சி மேற்கொண்டனர். நேற்று மதியம் கடுமையான காட்டுத் தீ ஏற்பட்டது. கொழுக்குமலை செல்லும் வழியில் ஒத்தமலை என்ற பகுதியில் மலையேற்றப் பயிற்சியில் அவர்கள் ஈடுபட்டிருந்தபோது காட்டுத் தீயில் சிக்கிக் கொண்டனர். உள்ளூர் மக்கள் உதவியுடன் வனத்துறையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீஸார் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். முதலில் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்ற தகவல் தெரியாமல் இருந்த நிலையில், தற்போது தகவல் தெரியவந்துள்ளது.

39 பேர் இரண்டு குழுவாக சென்னை மற்றும் ஈரோடு பகுதியிலிருந்து வந்தவர்கள் எனத் தகவல் கிடைக்கிறது. இவர்களில் 27 பேர் மீட்கப்பட்டு தேனி, மதுரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மதுரையில் அரசு ராசாசி மருத்துவமனையில் 9 பேரும், மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் ஒருவரும், கெனட் மருத்துவமனையில் 2  பேரும் அப்போலோ மருத்துவமனையில் 2 பேரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தகவல் மையம்

மதுரையில் சிகிச்சை பெறும் மொத்தம் 14 நபர்களில் 10 நபர்களுக்கு மேல் 70% முதல் 100%  தீக்காயத்துடன் உள்ளதாக தெரியவருகிறது . குரங்கணி தீ விபத்தில் சிகிச்சை பெறுபவர்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உறவினர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரியப்படுத்த கலெக்டர் தலைமையில் வருவாய்த்துறை, மருத்துவத்துறை  அதிகாரிகள் உதவியோடு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 25 நபர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் செயல்படுகின்றனர். மதுரை வடக்கு தாசில்தார் சிவக்குமார், மண்டல துணை வட்டாட்சியர் ரஞ்சித் மற்றும் வருவாய்த்துறை அதிகாரி வடிவேல் உள்ளிட்ட அதிகாரிகள் தனிகவனம் செலுத்தி பார்வையிட்டு வருகின்றனர்.

மருத்துவமனைக்கு வரும் உறவினர்கள் மனதளவில் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக 10 மனநிலை மருத்துவர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எந்த மனஅழுத்தமும் ஏற்படாத வகையில் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

மருத்துவமனையின் முதல்வர் மருதுபாண்டி

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் முதல்வர் மருதுபாண்டி கூறுகையில், "மதுரை அரசு மருத்துவமனையில் 9 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதில் ஒருவர் மட்டும் 35% தீக்காயம் அடைந்து சிகிச்சை பெறுகிறார். மற்ற நபர்கள் அனைவரும் 50,70,80, 90 சதவீதம் என அதிகமான தீ விபத்தின் மூலம் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் பிரத்யேக முறையில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பிரிவு மருத்துவர்கள் கவனித்து வருகின்றனர். ஒரு நபருக்கு ஒரு மருத்துவர் உட்பட செவிலியர்கள் என 6 நபர்கள் சிப்ட் முறையில் கவனித்துவருகின்றனர். 2 நபர்கள் மிகவும் கவலைகிடமாக உள்ளனர்" என கூறினார்.