Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

`மலையேற்றக் குழுவினரை அனுமதித்தது யார்?’ - சந்தேகம் எழுப்பும் ராமதாஸ்

குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு, மலையேற்றத்துக்கு ஏற்பாடு செய்த நிறுவனம்தான் அனைத்துக்கும் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். மேலும், தமிழக அரசு வனப்பகுதிகளில் கண்காணிப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

ராமதாஸ்

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்காகச் சென்றவர்களில் 9 பேர் காட்டுத்  தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவதுடன், அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். 

மலையேற்றக்  குழுவினரில் ஒரு பிரிவினர் காட்டுத் தீயின் நடுவில் சிக்கிக்கொண்டதால் 9 பேரைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. அவர்களின் இறப்பு ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மலையேற்றத்துக்கு ஏற்பாடு செய்த நிறுவனம்தான் அனைத்துக்கும் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. 

வழக்கமாகப் பிப்ரவரி முதல் கோடைக்காலம் முடியும் வரையிலான காலத்தில் காட்டுத் தீ வேகமாகப் பரவுவதற்கு வாய்ப்புள்ளதால், இந்தக் காலம் மலையேற்றப் பயிற்சிக்கு ஏற்றதல்ல என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, பழக்கமில்லாத மலைப்பகுதியில் மலையேற்றத்துக்குச் செல்லும்போது வனத்துறையினரிடம் அனுமதி வாங்கி, அப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களை வழிகாட்டியாக அழைத்துச் செல்ல வேண்டும்; அவர்கள் இல்லாவிட்டால் வனத்துறை பணியாளர்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்பது விதி. ஆனால், இதை மலையேற்ற நிறுவனம் பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது. ஒருவேளை பழங்குடியினரோ வனத்துறை ஊழியர்களோ துணைக்குச் சென்றிருந்தால் 36 பேரையும் பாதுகாப்பான வழிகளில் பத்திரமாக அழைத்து வந்திருக்க வாய்ப்புகள் உண்டு.  

குரங்கணி மலைப்பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகக் காட்டுத் தீ எரிந்துகொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் மலையேற்றக் குழுவினர் மலையேற்றப் பயிற்சிக்கு எவ்வாறு அனுமதிக்கப்பட்டார்கள் என்ற வினாவுக்கு விடை கிடைக்கவில்லை. வனத்துறையிலும் போதிய எண்ணிக்கையில் ஊழியர்கள் இல்லாததால் வனப்பகுதிகளில் முழுமையான சுற்றுக்காவல் பணியில் ஈடுபட முடியவில்லை என்று அத்துறை அதிகாரிகள் கூறும்போதிலும் அந்த வாதம் ஏற்கத்தக்கதல்ல. 

சாகசம் படைக்கும் நோக்குடன் சென்ற மாணவர்களும் இளைஞர்களும் சடலமாகத் திரும்புவது சகித்துக்கொள்ள முடியாத சோகமாகும். இனியாவது இத்தகைய சோக நிகழ்வுகள் நடக்கக் கூடாது என்பதுதான் அனைவரின் விருப்பமும் ஆகும். இதைக் கருத்தில்கொண்டு மலையேற்றத்தை ஒழுங்குபடுத்தவும் வனப்பகுதிகளில் கண்காணிப்பை வலுப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்
Advertisement
Advertisement

MUST READ

Advertisement