காட்டுத்தீயில் உயிரிழந்தவர்களுக்கு, கண்ணதாசன் வரிகளுடன் வைரமுத்து இரங்கல்

குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களுக்குக் கவிஞர் வைரமுத்து தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம், குரங்கணி மலைப்பகுதியிலுள்ள வனத்தில் கடந்த இரண்டு நாள்களாகத் தீ எரிந்துகொண்டிருந்த நிலையில், அங்கு
டிரெக்கிங் சென்ற சென்னையைச் சேர்ந்த ஐ.டி ஊழியர்கள், பள்ளி மாணவிகள் நேற்று மாலை காட்டுத்தீக்குள் சிக்கிக்கொண்டனர். இந்த
விபத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். 27 பேர் மீட்கப்பட்டு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிகழ்வு தமிழக மக்களை மிகவும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து பல்வேறு தரப்பினரும் பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் தங்களின் இரங்கலையும் கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள கவிஞர் வைரமுத்து, “உயிர் வலிக்கிறது; ஊரே அழுகிறது. காட்டுத்தீயில் கருகிய தங்கங்கள்மீது கண்ணீர் சொரிகிறேன். காயப்பட்டவர்கள் பிழைக்க வேண்டுமே என்று பேராசை கொள்கிறேன். பெற்றோர் நிலையில் நின்று பெருவலி உணர்கிறேன். 

“சாவே உனக்கொருநாள் சாவு வந்து சேராதோ; தீயே உனக்கொருநாள் தீமூட்டிப் பாரோமோ” என்ற கண்ணதாசன் வரிகளைக் கடன்வாங்கிக் கலங்குகிறேன். இந்த விபத்தில் இயற்கையின் பங்கு எவ்வளவு, மனிதப் பங்கு எவ்வளவு என்பது ஆய்வுக்குரியது. மரணத்திலிருந்து பாடம் படிப்போம்; புதிய இழப்புகள் நேராமல் காப்போம்” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!