வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (12/03/2018)

கடைசி தொடர்பு:15:42 (12/03/2018)

`இப்படி அவசரப்பட்டால் நாங்க எங்கதான் போவது?'- புகார் கொடுத்தவர்களை கலங்கடித்த போலீஸ்

பட்டப்பகலில் பூட்டியிருந்த வீட்டில் நகைகள் திருடப்பட்டிருந்த நிலையில் பலமுறை தகவல் கொடுத்தும் வராததால் போலீஸைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ்- பொதுமக்கள் மறியல்

கொஞ்சகாலமாகவே தமிழக காவல்துறையினரின் செயல்பாடுகள் பொதுமக்கள் மத்தியில் முகம் சுழிக்க வைக்கிறது. ஹெல்மெட் போடாத தம்பதியை போலீஸார் விரட்டிச் சென்று எட்டி உதைத்ததில் உஷா என்ற பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனைக் கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அவர்களை தடியடி நடத்தி காவல்துறையினர் கலைத்தனர். அந்தச் சம்பவம் அடங்குவதற்குள் அடுத்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

அரியலூர் மாவட்டம், செந்துறை அமிர்தம் நகரில் வசிப்பவர் கலையரசன். இவர் தனியார் சிமென்ட் ஆலையில் வேலை செய்து வருகிறார். காலை வழக்கம் போல் வேலைக்குச் சென்று விட்டார். தனது குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால் அவரது மனைவி மகனுடன் திருச்சி சென்றுவிட்டார். வீட்டில் இருந்த அவரது பெரிய மகள் வீட்டை பூட்டிவிட்டு அருகேயுள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து தனது பாட்டியுடன் வீட்டுக்கு வந்தபோது வீட்டின் பின்பக்க கதவு திறந்துகிடப்பது கண்டு உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 6 பவுன் நகைகள் மற்றும் 20 ஆயிரம் பணம் திருடு போயிருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து செந்துறை போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், போலீஸார் வரவில்லை. பின்பு பொதுமக்கள் இணைந்து காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். அதற்கு காவல்துறையினர், இங்கு ஸ்டேசனில் ஆள் இல்லை வந்ததும் அனுப்புகிறோம். எல்லோருமே அவசரப்பட்டால் நாங்க எங்கதான் போவதுனு அலட்சியமாகப் பேசியிருக்கிறார். இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதியில் பொதுமக்கள் செந்துறை - உடையார்பாளையம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த செந்துறை போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்துசென்றனர்.