அனுமதிபெறாமல் வனத்துக்குள் சென்றால் கடும் நடவடிக்கைகள்! - முதல்வர் பழனிசாமி எச்சரிக்கை

பழனிசாமி

"இனி அனுமதிபெறாமல் வனப்பகுதிகளுக்குள் சென்றால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று முதல்வர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உழைக்கும் பெண்களுக்கான மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கு விழா சேலம் சோனா கல்லூரியில் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு உழைக்கும் பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கினார். அப்போது, பத்திரிகையாளர்களை சந்தித்த முதல்வர், ''மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவுத் திட்டமான உழைக்கும் பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கும் விழாவும், அம்மாவின் 70-வது பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் 70 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழாவும் சேர்த்து, சென்னையில் நடத்தினோம். அந்த நிகழ்ச்சிக்கு பிரதமர் வந்து சிறப்பித்தார். அதன் தொடர்ச்சியாக இன்று சேலத்தில், உழைக்கும் பெண்களுக்கான ஸ்கூட்டர் வழங்கும் விழா நடைபெற்றது. இன்று, முதல் கட்டமாக 1,004 பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கப்படுகிறது. சேலத்தில் 17,000 பெண்கள் மானியத்துக்காக விண்ணப்பித்திருக்கிறார்கள். ஆண்டுக்கு ஒரு லட்சம் ஸ்கூட்டர் வழங்கவிருக்கிறோம்.

தேனி மாவட்டம் போடியை அடுத்த குரங்கணி மலைப்பகுதியில், 39 பேர் மலையேறும் பயிற்சிக்காகச் சென்றுள்ளனர். அதில் 3 பேர் மலை ஏறாமல் திரும்பி வந்துவிட்டார்கள். 36 பேர் காட்டுத் தீயில் சிக்கினார்கள். அவர்களில் 10 பேருக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல் வீட்டுக்குத் திரும்பவிருக்கிறார்கள். 17 பேருக்கு மதுரையில் 10 பேருக்கும், கன்னியாகுமரியில் 2 பேருக்கும், தேனியில் 5 பேருக்கும் தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டுவருகிறது. சிலர் இந்தச் சம்பவத்தில் இறந்திருப்பது வேதனையளிக்கிறது.

தீ பரவ காரணமாக இருந்தவர்கள்மீது விசாரணை நடத்தப்படும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி ஆலோசனை செய்து வழங்கப்படும். தற்போது, காடுகளில் இலைகள் காய்ந்திருப்பதால், தீ வேகமாகப் பரவக்கூடிய நிலையில் அனைத்துத்துறை அதிகாரிகளும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஏற்கெனவே, வனத்துறை சட்டங்கள் இருக்கின்றன. மலையேறும் பயிற்சிக்குச் சென்றால் வனத்துறையினரிடம் அனுமதிபெற்றுச் செல்ல வேண்டும். ஆனால், அவர்கள் வனத்துறை அனுமதி பெறாமல்  சென்றிருக்கிறார்கள். இனி அனுமதி பெறாமல் வனப்பகுதிகளுக்குள் சென்றால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இன்று மாலை, நான் மதுரை சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க இருக்கிறேன். காவிரி மேலாண்மை வாரியத்திற்காக 15-ம் தேதி சட்டசபையைக் கூட்ட இருக்கிறோம். அதில் நல்ல முடிவுகளை எடுப்போம் '' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!