`தாமிரபரணி இருந்தும் எங்களுக்குத் தண்ணீர் இல்லை' - குடங்களுடன் கலெக்டர் ஆபீஸை முற்றுகையிட்ட பெண்கள்

நெல்லை மாவட்டத்துக்கு உட்பட்ட கிராமங்களுக்கு தாமிரபரணிக் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். .

காலிக்குடங்களுடன் முற்றுகை

நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள கிராமம், வன்னிக்கோனேந்தல். இந்தக் கிராமத்தில், சுமார் 5,000 மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு, ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தபால் நிலையம்,  கால்நடை மருத்துவமனை, தமிழ்நாடு மின்சார வாரியம் உள்ளிட்டவை உள்ளன. அத்துடன், எலுமிச்சை ஆராய்ச்சி நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு, அதற்கான கட்டுமானப் பணிகளும் நடைபெற்றுவருகின்றன.

இந்த நிலையில், தங்களுடைய கிராமத்துக்கு குடிநீர் வழங்காததைக் கண்டித்து, அந்தக் கிராம மக்கள் காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுதொடர்பாக அவர்கள் அளித்த மனுவில், ''தாமிரபரணி பாயும் மாவட்டத்தில் நாங்கள் வசித்த போதிலும், எங்களுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. தாமிரபரணி ஆற்றிலிருந்து தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தண்ணீர் கொண்டுசெல்லப்படுகிறது.

 மானூர் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கான தண்ணீர், எங்கள் ஊருக்குள் வராமல் மாற்றுப் பாதையில் சுற்றிக்கொண்டு செல்லும்நிலை உள்ளது. அதனால், நாங்கள் மிகுந்த வேதனையில் உள்ளோம். பலமுறை மனு அளித்தும் எங்கள் கோரிக்கையை அதிகாரிகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. அதனால், நாங்கள் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்’’ எனத் தெரிவித்துள்ளனர்.

வன்னிக்கோனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பாக காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினார்கள். அதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர், அதிகாரிகள்  பேச்சுவாரத்தை நடத்தியதைத் தொடர்ந்து கலைந்துசென்றனர்.      

Do you like the story?

Please Appreciate the Author by clapping!