முதல்வர் பழனிசாமி ஆதரவாளர்கள் நடத்திய ஸ்கூட்டர் விழா அட்ராசிட்டிகள்!

முதல்வர் பழனிசாமி விழா

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய சொந்த மாவட்டத்துக்கு ஒவ்வொருமுறை வரும்போதும் அவருடைய ஆதரவாளர்கள் ஆடம்பரமாக வரவேற்பு கொடுப்பது வழக்கம். ஆனால், இந்த முறை விதிமுறைகளை மீறி சிக்னலில் ஃப்ளெக்ஸ் போர்டுகள், சாலையோரமாக 1000-க்கும் மேற்பட்ட சில்வர் கும்பங்களோடு மக்களைக் காக்க வைத்ததும் பொதுமக்கள் மத்தியில் முதல்வர்மீது அதிருப்தியை ஏற்படுத்துகிறது.

இதுபற்றி சேலத்தைச் சேர்ந்த மக்களிடம் விசாரித்தபோது, ''தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி செய்வதாகச் சொல்கிறார். ஆனால், ஜெயலலிதா மத்திய அரசின் பெரும்பான்மையான திட்டங்களை எதிர்த்தார். உதய் மின் திட்டம், நீட் தேர்வு எனப் பல திட்டங்களை எதிர்த்து வந்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமி மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் ஆதரித்து வருகிறார். ஆனால், ஒரு வகையில் ஜெயலலிதாவைப்போல நடந்துகொள்கிறார். சேலத்துக்கு வரும் ஒவ்வொரு முறையும் ரோடு முழுவதும் ஃப்ளெக்ஸ் போர்டுகள், தாரை தப்பட்டைகள், பாதையின் இருமருங்கிலும் பூரண கும்ப மரியாதையோடு பொதுமக்களை காக்க வைப்பது, பேருந்தை நிறுத்துவது என மக்களுக்கு தொந்தரவு தரும் வகையில் முதல்வரின் ஆதரவாளர்கள் செய்யும் அட்ராசிட்டிகள் தாங்க முடியவில்லை.

தற்போது பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் விழா சோனா கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது. முதல்வரை வரவேற்க சேலம் 5 ரோடு ஸ்டேட் பேங்க் காலனி ரவுண்டானாவில் போக்குவரத்து சிக்னலை மறைத்து பல அடி உயர கட்ட அவுட் வைத்து வாகன ஓட்டிகளை சித்ரவதை செய்கிறார்கள். அந்த வழியாக ரயில்வே நிலையத்துக்கு டூ விலரில்கூட போக முடியாமல் முழுமையாக அந்த ரோட்டில் வாகனங்கள் செல்ல காவல்துறை தடை விதித்துவிட்டார்கள். 10 மணிக்கு நடக்க இருந்த விழாவுக்கு 8 மணியில் இருந்தே சாலை ஓரமாக சில்வர் கும்பங்களோடு காக்க வைத்தார்கள்'' என்றார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!