`வனத்துறையைக் கவனியுங்கள் முதல்வர் அவர்களே!' - குரங்கணி சம்பவத்துக்குப் பின்னணியில் 8 விஷயங்கள்

குரங்கணி ட்ரெக்கிங்

தேனி மாவட்டம், குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் ஒன்பது பேர் மரணமடைந்துள்ளனர். ஆறு பேர் கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளன. 'வனத்துறையின் அனுமதியின்றி மலையேற்ற பயிற்சி மேற்கொண்டுள்ளனர். அனுமதி பெற்றுதான் மலையேற்றம் மேற்கொள்ள வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது. அனுமதி பெறாமல் சென்றால் எப்படிப் பாதுகாப்பு அளிக்க முடியும். வருங்காலத்தில் இத்தகைய நிபந்தனைகளை மீறுபவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரித்திருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 

1. "குரங்கணி சம்பவம், இரண்டு விஷயங்களைக் கற்றுக்கொடுத்திருக்கிறது. நமது காடுளில் மலையேற்றம் என்பது வெளிநாடுகளில் பனிமலை ஏறுவது; பனிச்சறுக்கு ஆடுவது; பாறைகளில் ஏறுவது போன்று சாகசமாக இருக்கக் கூடாது. நமது மேற்கு தொடர்ச்சி மலை  உலகில் உள்ள அரிதிலும் அரிதான உயிர்ச்சூழல் வளமை மிகு  எட்டு இடங்களில்  ஒன்று. இங்கு சாகச மனநிலையோடும் சுற்றுலா செல்லும் மனநிலையோடும் செல்லக் கூடாது. சுற்றுலா என்பது நம்முடைய உணர்வுகளுக்கு இடமளிப்பது. ஆடலாம்; பாடலாம்; என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் சூழல் சுற்றுலா என்பது நாம் மௌனமாக இருந்து இயற்கையை கவனிப்பது, உணர்வது. அரிய வன உயிரின உய்விடம் இது. காடு என்பது ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். நாள்தோறும் மாறிக்கொண்டே இருக்கும். வனத்துக்குள் நுழையும்போது, அதுகுறித்த அறிவு படைத்தவர்களுடன் செல்வது நல்லது. இயற்கை ஆர்வம் என்பது வேறு; இயற்கை அறிவு என்பது வேறு. நன்கு பயிற்சி பெற்ற வனத்துறை அதிகாரியாக இருந்தாலும் வன ஆய்வாளராக இருந்தாலும், காட்டுக்குள் நுழையும்போது அந்தக் காட்டைப் பற்றி நன்கு அறிந்த உள்ளூர் மக்களுடன்தான் செல்வார்கள்" என விவரித்த ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் நிறுவனர் காளிதாசன், மலையேற்றம் என்ற பெயரில் நடக்கும் அத்துமீறல்களையும் வனத்துறைக்குள் நடக்கும் குளறுபடிகளையும் நம்மிடம் பட்டியலிட்டார். 

கொழுக்கு மலை2. இயற்கை ஆர்வம் என்ற பெயரில் பலரும் காட்டுக்குள் செல்கின்றனர். வனப்பகுதிக்குள் நுழையும்போது வனத்துறையின் அனுமதி வேண்டும். உள்ளூர் மக்கள் சிலராவது உடன் வர வேண்டும். உள்ளூரில் உள்ள வனப் பணியாளர்களோ வேட்டைத் தடுப்பு காவலர்களோ உடன்வந்தால் இன்னும் சிறப்பு. அவர்களுக்கு அந்தக் காட்டைப் பற்றி நன்கு தெரியும். 
இதுபோன்ற மலையேற்றங்களுக்கு எண்ணிக்கை மிகக் குறைவாகத்தான் இருக்க வேண்டும். 15 பேருக்கு மேல் எண்ணிக்கை கூடக் கூடாது. காட்டுக்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். சாலையில் பயணிக்கும்போது எப்படி விதிகளைப் பின்பற்றுகிறோமோ, அதேபோல்  காடுகளுக்கு செல்லும்போதும் விதிகள் உண்டு. காட்டு விதிகளில் மிக முக்கியமானது, பெருங்கூட்டமாகச் செல்லக் கூடாது .காட்டுக்குள் செல்லும்போது உடையின் வண்ணம், ஷு உள்பட அனைத்திலும் கட்டுப்பாடுகள் உண்டு . காட்டோடு ஒன்றிப்போகும் வண்ணங்களிலேயே உடை அணிய வெண்டும்.  காட்டன் உடைகளை அணிவதே நல்லது; நைலான் உடை தவிர்க்க வேண்டும். குரங்கணி விவகாரத்தில், தீயைக் கண்டதும் பதறிபோய், கையைப் பிடித்துக் கொண்டு பலர் ஓடியிருக்கிறார்கள். அதனால் தடுக்கி விழுந்து அடிபட்டு எழ முடியாமல் கிடந்தவர்கள் தீயில் சிக்கினர்.  அதிகப்படியான உயிரிழப்புக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது. உள்ளுர் வழிகாட்டிகளோடு சென்றிருந்தால் தீயின் வாசமறிந்து முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுத்திருப்பர். 

3. கானுயிர் கணக்கெடுப்பு எடுக்கச் செல்லும்போது, விசில் உள்ளிட்ட சில உபகரணங்களைக் கொடுத்து அனுப்புவார்கள். ஏனென்றால்,  யானை உள்ளிட்ட ஏதாவது வன விலங்குகள் குறுக்கே வந்துவிட்டால்,  சிதறி ஓடி வழி தவறிவிடுவர்கள் . விசில் அடித்து மற்றவர்களைக்  கண்டுபிடித்துவிடலாம். சாலையில் மற்றவர்கள் தவறு செய்தாலும் விபத்து நடக்கும். காட்டில் நாம் தவறு செய்தால் மட்டுமே விபத்து நடக்கும். காட்டைப் பற்றிய அறிவோடு சென்றால், தவறு நடக்க வாய்ப்பில்லை. 
குரங்கணி மலையேற்றுக்கு ஏற்பாடு செய்த சென்னை, ட்ரெக்கிங் கிளப் இதற்கு முன்பாக பல இடங்களில் இயற்கை ஆர்வலர்களை வசமாகச் சிக்கவைத்துள்ளனர்.  அதில், சிலர் இறந்து போய் இருக்கிறார்கள். அது ஓரிரு மரணங்களாக இருந்ததால் வெளியில் தெரியவில்லை. விதிகளை மீறி, இவர்கள் பல இடங்களுக்குச் சென்றுள்ளனர். இதே அமைப்பினர் ஆந்திர காடுகளுக்கு இயற்கை ஆர்வலர்களை அழைத்துச் சென்றுள்ளனர். அனுமதியின்றி சென்றதால், ஆந்திர வனத்துறை அதிகாரிகள், இவர்களைப் பிடித்து வைத்துக் கொண்டனர். அவர்களில் சிலர், எங்களைத் தொடர்பு கொண்டு உதவி கேட்டனர். கர்நாடகாவில் தண்ணீர்கூட இல்லாமல் இயற்கை ஆர்வலர்களைத் தவிக்கவிட்டுள்ளனர். மனஅழுத்தம் ஏற்படக் கூடிய துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, ஸ்ட்ரெஸ் ரிலீஃப் என்ற பெயரில் வாரத்தின் இறுதிநாள்களில் ட்ரெக்கிங் அழைத்துச் செல்கின்றனர். குரங்கணி மலையேற்றத்துக்கு, 'மகளிர் தினம் ஸ்பெஷல் ட்ரெக்கிங்' என்ற பெயரில் அழைத்துச் சென்றுள்ளனர். அப்படிச் சென்றுதான் மாட்டிக் கொண்டனர். மலையேற்றம் என்ற பெயரில் செயல்படும் நிறுவனங்களையும் முழுமையாகக் கண்காணிக்க வேண்டும். 

4. . குரங்கணி வன பாதையில் செல்ல, அங்கிருக்கும் எஸ்டேட் மக்களுக்கு அனுமதி உண்டு. இதைப் பின்பற்றி சுற்றுலா சென்றவர்களும் சென்றுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் காட்டின் எல்லையோரம், கேளிக்கை விடுதிகளைக் கட்டுகின்றனர். பண்ணை வீடு என்ற பெயரில் இந்தக் குடில்களைக் கட்டுகின்றனர். நமக்கு மசினகுடியைப் பற்றி மட்டும்தான் இதுவரையில் அறிந்திருந்தோம். பொள்ளாச்சி, ஆனைமலை, சத்தியமங்கலம் என அனைத்துப் பகுதிகளிலும் ரிசார்ட்டுகள் முளைத்துவிட்டன. கட்டடம் எழுப்பிய பிறகு, 'நைட் சஃபாரி வாருங்கள்' என விளம்பரப்படுத்துகிறார்கள். 'ட்ரெக்கிங்', 'கேம்ப் ஃபயர்' எனப் பல பெயர்களை சூட்டியுள்ளனர். இவர்களுக்கு காட்டுக்கு செல்ல அனுமதியும் இருக்காது. அதற்கான அறிவும் இருக்காது.  வணிகம் மட்டுமே அவர்களின் நோக்கம். அப்படி போய் யானைகளிடம் சிக்கி இறந்து போன வெளிநாட்டுப் பயணிகளும் உண்டு. இத்தகு கேளிக்கை விடுதிகளை தடுப்பதற்கு நம்மிடம் எந்தவிதச் சட்டங்களும் இல்லை என்பதுதான் வேதனையானது. இப்போது இறந்தவர்கள் அனைவரும், இயற்கை ஆர்வத்தில் சென்றவர்கள். இதற்கு ஏற்பாடு செய்தவர்கள்தான், தண்டிக்கப்பட வேண்டியவர்கள். எந்தப் பகுதிக்குச் சென்றாலும், வனத்துறை அனுமதி இல்லாமல் செல்லக் கூடாது என்பதை இயற்கை ஆர்வலர்கள் உணர வேண்டும். 

குரங்கணி தீ விபத்து

5.  'இயற்கை சுற்றுலா வேண்டாம்' என்று நாங்கள் சொல்லவில்லை. அதற்கென இருக்கும் முறையான வழிகளைப் பின்பற்ற வேண்டும். கடந்த ஒருவார காலமாகவே, தேனி வனப்பகுதியில் அடிக்கடி தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. தீ எரிந்து கொண்டிருக்கும் பகுதிக்கு, 'ட்ரெக்கிங்' என்ற பெயரில் அழைத்துச் செல்கிறார்கள் என்றால், அந்தக் காட்டைப் பற்றிய புரிதல் இல்லாதவர்கள்தான் இவ்வாறு செய்துள்ளனர். பொதுவாக, நமது காடுகளில்  சமவெளிபகுதியில் முற்புதர் காடுகள் நிரம்பியிருக்கின்றன. மலை ஏற ஏற இலையுதிர் காடுகளாக இருக்கும். ஆயிரம் அடிவரை  இலையுதிர் காடுகளாகத்தான் இருக்கும். டிசம்பர் மாதத்தில் பனிக்காலம் தொடங்கும்போது, முள்புதர் காடுகளில் உள்ள புல்கள் கருகத் தொடங்கிவிடும்.  ஜனவரிக்குப் பிறகு இலையுதிர் காடுகளில் உள்ள இலைகள் காய்ந்து விழுந்துவிடும். நம்முடைய காடுகளில் தீ அவ்வளவு எளிதில் இயற்கையாகப் பற்றிக் கொள்ளாது. அனைத்தும் மனிதர்களால் ஏற்படுத்தக் கூடியவைதான். சிகரெட் பற்ற வைக்கும்போது கீழே விழுந்து பற்றிக் கொள்வது  ஒருவகை. இரண்டாவது, உள்நோக்கத்தோடு பற்ற வைப்பது. காடுகளில் வசிப்பவர்களுக்கு ஒரு உள்நோக்கம் உண்டு. காடு எரிந்துவிட்டால், புல் நன்றாக முளைக்கும்; ஆடு, மாடுகள் மேய்க்கலாம் என்பது அவர்களது நம்பிக்கை. 'விளக்கு மாறு புல் நிறையக் கிடைக்கும்' என்பதற்காகவும் தீ வைப்பது வழக்கம். இதனால், 'மகசூல் கிடைக்காது' என்பதையும் அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். வேண்டும் என்றே தீயைப் பற்ற வைத்துக் கொண்டு, அது கொளுந்துவிட்டு எரிவதை வக்கிரமாகப் பார்க்கும் ஒரு பிரிவினரும் இருக்கிறார்கள். அவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வனத்தில் தீ பற்ற வைக்காமல் தடுக்க, விழிப்பு உணர்வு பிரசாரம் அல்லது நடவடிக்கை எடுப்பது மிக முக்கியமானது
 

6. தீ பற்றும் வாய்ப்புள்ள பகுதிகளில் அதைத் தடுப்பதற்கு வனத்துறை மூலம் தீ தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு ஒவ்வொரு டிசம்பர் மாதமும், ' ஃபயர் வாட்சர்ஸ்' என்ற பணியிடத்தை நிரப்புவார்கள். அவர்கள் தீ கோடுகளை (Fire Line) காட்டுக்குள் உருவாக்குவார்கள். சாலைபோல்   20 அடிவரை சருகுகள் இல்லாமல் காட்டை சுத்தப்படுத்துவார்கள். தீ வந்தாலும் எதிர்த் தீ பற்ற வைத்து, பரவாமல் தடுப்பார்கள். முதுமலை போன்ற பகுதிகளுக்கு நிதி இருப்பதால் இவ்வாறு செய்கின்றனர். தேனி போன்ற காப்புக் காடுகளில் நிதிப் பற்றாக்குறையால் ஃபயர் வாட்சர்ஸ் நியமிக்கப்படுவதில்லை. அந்தவேலைகள் நடப்பதே இல்லை. 
ஒரு தீ வந்தவுடன் தகவல் கிடைத்தால்தான் உடனே செல்ல முடியும். வனத்துறைக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையில் ஒருங்கிணைப்பு இருந்தால்தான் தீ பற்றிய தகவலே கிடைக்கும். பல இடங்களில் வனத்துறையில் களப் பணியாளர்களே கிடையாது என்பது கூடுதல் சோகம். ஐந்தாயிரம் ஏக்கர் கொண்ட ஒரு வனச்சுற்றுக்கு   வனக் காப்பாளர், வனக் காவலர் என இரண்டே பேர்தான் இருக்கிறார்கள். இந்தப் பணியிடங்களில் 50 சதவீதம் இன்னமும் நிரப்பப்படவில்லை. தற்போது இருப்பவர்களில் பெரும்பான்மையினர் 50 வயதைக் கடந்தவர்கள். தீ குறித்த தகவலைப் பெறுவதற்கும் உடனே செல்வதற்கும் பணியாளர்கள் கிடையாது. நவீனத் தொழில்நுட்பங்கள் எவ்வளவு இருந்தாலும், தீ பரவிவிட்டால் அதனைக் கட்டுப்படுத்த முடியாது. தீ தடுப்பு நடவடிக்கைகளில் மட்டும் ஈடுபடலாம். 

குரங்கணி தீ விபத்து

7.. குரங்கணி சம்பவம், மதுரை வன மண்டலத்தில் நடந்துள்ளது. கடந்த ஐந்து மாதங்களாக, மதுரைக்கு மண்டல வனப்பாதுகாவலரையே அரசு நியமிக்கவில்லை. தகுதிபடைத்தவர்கள் இருந்தும் நிரப்பப்படவில்லை. இது தவறான நிர்வாகத்தையே காட்டுகிறது. மனித உயிர்கள் இறந்ததும் பதை பதைக்கிறோம். ஒவ்வொரு தீயும் நூற்றுக்கணக்கான வன உயிர்களைக் கொல்கிறது. தீ பற்றிய காட்டில் உடனே களைச் செடிகள் பரவிவிடும். காட்டின் தன்மையும் மாறிவிடும். இதனைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு தகுதியுடையதாக வனத்துறை இருக்கிறதா என்பதும் கேள்விக்குறிதான். 

8. வேட்டைத் தடுப்பு, தீ தடுப்பு, யானைத் தடுப்பு காவலர்கள் ஏராளமானோர் தேவைப்படுகின்றனர். நிதிப் பற்றாக்குறை என்ற பெயரில் இந்தப் பணியிடம் நிரப்பப்படவே இல்லை. நம்மிடம் ஐந்தில் ஒரு பங்கு காடு இருக்கிறது. வனத்துறையை வருமானம் வராத  துறையாக அரசு பார்க்கிறது.ஆகவே இத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதி மிகக் குறைவு.  நமது பல தலைமுறைக்கான தண்ணீரை,  மூச்சுக்காற்றை பாதுகாக்கும் துறையாக அரசு இதைப் பார்க்க வேண்டும். ஐம்பதாண்டுகளுக்கு முன்பு எந்த எண்ணிக்கையில் ஆள்கள் நிரப்பப்பட்டார்களோ, அதே எண்ணிக்கையில்தான் இப்போதும் பணியாள்கள் உள்ளனர். காட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சாலைகளைப் போடுகின்றனர். இதனால், விதிமீறி உள்ளே நுழைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டன. விளைவுகளுக்கு முக்கியக் காரணம் இதுதான். வன உயிர்களின் பார்வையில் இருந்து கவனித்தால்தான், குரங்கணி போன்ற சம்பவங்களை எதிர்காலத்தில் தடுக்க முடியும். வணிக சுற்றுலாவை நோக்கி, சாலைகள் அதிகரிக்கின்றன. இதன் எதிர்கால அபாயத்தை அரசுகள் உணர வேண்டும். " என்றார் மிகுந்த ஆதங்கத்துடன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!