`குரங்கணி மலையேற்ற பயிற்சியை ஒருங்கிணைத்த சென்னை அமைப்பு!’ - நிர்வாகி தலைமறைவு #KuranganiForestFire

குரங்கணி தீ விபத்தில் சிக்கியவர்களில் பெரும்பாலானோரை `மகளிர் தின சிறப்பு மலையேற்றம்’ என்ற பெயரில் சென்னை ட்ரெக்கிங் கிளப் என்ற அமைப்பினர் அழைத்துச் சென்றது தற்போது தெரியவந்துள்ளது. 

தேனி மாவட்டம் போடியை அடுத்த குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்குச் சென்றவர்கள் நேற்று மாலை காட்டுத் தீயில் சிக்கிக் கொண்டனர். இதில், 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் 90 சதவிகித தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மலையேற்றப் பயிற்சிக்குச் சென்றவர்கள் முறையான அனுமதி பெற்றுச் சென்றனரா என்ற கேள்வியை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எழுப்பியுள்ளனர். 

பீட்டர் வான் கெய்ட்இந்தநிலையில், குரங்கணி காட்டுத் தீ விபத்தில் சிக்கியவர்களில் பெரும்பாலானோர் சென்னை ட்ரெக்கிங் கிளப் என்ற அமைப்பின் மூலம் மலையேற்றப் பயிற்சிக்குச் சென்றது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக அவர்களது இணையதளத்திலும் விளம்பரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கொலுக்குமலைப் பகுதியில் மலையேற்றப் பயிற்சி மேற்கொள்ள இருப்பதாகவும், இதற்காகச் சென்னையிலிருந்து மார்ச் 9-ம் தேதி அதிகாலை 5 மணி அளவில் புறப்படும் படியாகப் பயணத் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. 

ட்ரெக்கிங் பயணத்தின் ஒருங்கிணைப்பாளர்களான திவ்யா மற்றும் நிஷா ஆகியோர் 90 சதவிகித தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரம், ஆண் ஒருங்கிணைப்பாளர்களான விபின் மற்றும் அருண் ஆகியோர் உயிரிழந்துவிட்டனர். இதனால், மலையேற்றப் பயிற்சி மேற்கொள்ள சென்னை ட்ரெக்கிங் கிளப் அமைப்பைச் சேர்ந்தவர்கள் முறையான அனுமதி பெற்றிருந்தனரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல், சென்னை ட்ரெக்கிங் கிளப்பின் முக்கிய நிர்வாகியான பீட்டர் வான் கெய்ட், விபத்துக்குப் பின்னர் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அந்த அமைப்பு குறித்து போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பெல்ஜியத்தைச் சேர்ந்த பீட்டர், சென்னை பாலவாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்து சென்னை ட்ரெக்கிங் கிளப் அமைப்பை நடத்தி வந்துள்ளார். இதனால், அவரைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!