வெளியிடப்பட்ட நேரம்: 18:45 (12/03/2018)

கடைசி தொடர்பு:18:45 (12/03/2018)

பயிர்க் காப்பீட்டில் மோசடி செய்த அதிகாரிகள்! கலெக்டரிடம் புகார் அளித்த கிராம மக்கள்

கூட்டுறவு சங்கத்தின் மூலம் விவசாயப் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் நடைபெறும் மோசடி குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஓரியூர் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்

கிராம மக்கள்.

 

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் ஓரியூரில் இயங்கி வரும் சிறுகம்பையூர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்துவதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி ஓரியூர் பகுதி மக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில், ஒரே விவசாயி பெயரில் இரு முறை பயிர்க் காப்பீடு செய்யப்பட்டு இழப்பீட்டுத் தொகை பெறப்பட்டிருப்பதாகவும் பல நபர்களின் பெயர்களில் பயிர் செய்யப்பட்ட பரப்பைவிட கூடுதலான அளவு நிலப்பரப்பு மோசடியாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும்  அடையாளம் தெரியாத நபர்களின் பெயரில் பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளதுடன், அரசால் தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகையைக் கூட்டுறவு சங்க செயலாளர் கையாடல் செய்திருப்பதாகவும் கூடுதல் நிலங்களை மோசடியாகப் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்க வருவாய் அதிகாரிகள் துணையாக இருந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

 மேலும், இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள்மீதும் இதற்குத் துணையாக இருந்த வருவாய்த்துறை அதிகாரிகள்மீதும் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓரியூர் மக்கள் சார்பாக அப்பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் மற்றும் மணிகண்டன் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.