`நடக்காது என்றார்கள்; நடந்துவிட்டது' - அதிகாரிகளின் அலட்சியத்தால் கொந்தளித்த உறவினர்கள்

உயர் அழுத்த மின்சாரம் தாக்கியதால், வேலைபார்த்துக்கொண்டிருந்த கொத்தனார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 'இந்த இறப்புக்கு அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும்' என்று ஜெயங்கொண்டம் - கும்பகோணம் சாலையில், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் காலனி தெருவைச் சேர்ந்தவர் தங்கராசு கொத்தானார். தா.பழூரை அடுத்த சிந்தாமணி கிராமத்தில் மயான கொட்டகை அமைக்கும் பணியில் தங்கராசு ஈடுபட்டுவருகிறார். காலை வழக்கம்போல கட்டட வேலைக்குச் சென்ற அவர், அங்கு மயான மேற்கூரையில் சிமென்ட் பூசும் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, மயான மேற்கூரைக்கு மேல் சென்ற, உயர் அழுத்த மின் கம்பியில் எதிர்பாராத விதமாக அவரது கை பட்டதால், மின்சாரம் தாக்கி தூக்கிவீசப்பட்டதால், தங்கராசு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இந்த உயிர்ப்பலியால் அதிர்ந்த தா.பழூர் மற்றும் சிந்தாமணி காலனி தெருவைச் சேர்ந்த மக்கள், மயானம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து, தா.பழூர் - ஜெயங்கொண்டம் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

                                    

                

 அப்போது அவர்கள், ''சிந்தாமணி கிராமத்தில் உள்ள மயானக் கொட்டகையின் மேற்கூரைக்கு மேல், புதிதாக உயர் அழுத்த மின்பாதை செல்கிறது. இங்கு மயானம் கட்டாதீர்கள், இதனால் உயிர்ப்பலி ஏற்படக்கூடும் என கட்டடப்பணி ஆரம்பிக்கும்போதே நாங்கள் தெரிவித்தோம். ஆனால் அதிகாரிகள், அதுபோல எதுவும் நடக்காது. நடந்தால் நாங்கள் பொறுப்பேற்றுக்கொள்கிறோம் என்றார்கள். நாங்கள் புகாரும் கொடுத்தோம்; அதைக் கண்டுகொள்ளவில்லை. அதிகாரிகளின் அலட்சியத்தால்தான் இந்த விபத்து நடந்துள்ளது.இந்த அதிகாரிகளின் அலட்சியத்தால் இன்னும் எத்தனை உயிர்களைப் பறிக்கொடுக்கப் போகிறோமோ தெரியவில்லை. இதற்குப் பிறகும் இதை சீரமைக்கவில்லை என்றால், தொடர்ந்து உயிர்ப்பலி ஏற்படும். எனவே, பொதுமக்களுக்கு எந்தவித இடையூறு, இல்லாதபடி மயானக் கொட்டகையை வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என்றனர்.
பின்னர், இதுகுறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தா.பழூர் போலீஸார் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், போராட்டம் நடத்திய மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் தெரிவித்ததையடுத்து, பின்னர் அங்கிருந்து கிராம மக்கள் கலைந்துசென்றனர்.

                                

இப்போராட்டத்தால், ஜெயங்கொண்டம் - கும்பகோணம் சாலையில், சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இறந்த தங்கராசு உடலை போலீஸார் கைப்பற்றி, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம்குறித்து தா.பழூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!