வெளியிடப்பட்ட நேரம்: 19:07 (12/03/2018)

கடைசி தொடர்பு:19:07 (12/03/2018)

உலகை அச்சுறுத்தும் தண்ணீர்ப்பஞ்சம் ! இந்தியாவின் நாள்களும் எண்ணப்படுகின்றன...


                      தண்ணீர் பாதை இதுதான்... ஆந்திராவின் கண்டலேறு 

சென்னைக்கும், தமிழகத்துக்கும் மட்டுமல்ல, உலகத்துக்கே 'தண்ணீர்' தேவைக்கான அச்சம் ஏற்பட்டுள்ளது. சோமாலியா, சிரியா, இஸ்ரேல், ஈரான், தென் ஆப்பிரிக்க நாடுகள், நைஜீரியா வரிசையில் இந்தியாவும் தண்ணீர்ப் பஞ்சத்தில் சிக்கிக் கிடக்கிறது. தென்னாப்பிரிக்க நாட்டின் தலைநகர் 'கேப்டவுன்'  சிட்டி, தண்ணீருக்கு ரேசன் முறையைக் கொண்டு வந்துள்ளது.  கேப்டவுன் நகரத்தை உலகத்தின் தண்ணீரே இல்லாத வறண்ட நகரமாக அறிவிக்கும் நாளாக 2018, ஏப்ரல் மாத இறுதிநாள் கணிக்கப் பட்டுள்ளது. ஓரளவு தாக்குப் பிடிக்கும் என்று கருதப்பட்ட  ஈரான் நாட்டிலும், எப்போதும் இல்லாத  தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, தண்ணீர்ப் பஞ்சத்தில் குஜராத் மாநிலத்துக்கு முதலிடம் கிடைத்திருக்கிறது. பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட  பெரிய அணையான 'நர்மதை'  யில், இப்போது  தண்ணீர் இல்லை. கிராமங்களை அதிகளவில் கொண்டிருக்கும் குஜராத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர்ப் பஞ்சம், நாளுக்கு நாள் உச்சத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறது. 'இன்னொரு உலகப்போர் தண்ணீருக்காகத்தான் ஏற்படும்' என்று கவிஞர் வைரமுத்து சொன்ன போதும் ஏற்கவில்லை, நீரியல் வல்லுநர்கள் சொல்லும் போதும் அரசாங்கத்தின் காதுகள் கேட்கவில்லை. 2025-ம் ஆண்டில்  இந்தியாவில் கடுமையான தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படும் என்று ஆய்ந்து சொன்ன  வல்லுநர்களின் எச்சரிக்கையை உதாசீனம் செய்வது,  ஈரக்கையுடன், மின்சாரத்தைத் தொடுவதற்கு சமமானது...  நாடும், மக்களும்  பூமியில் மிச்சமிருக்க ஒரேயொரு வாய்ப்பு, இந்தியாவுக்கு  இப்போதும் இருக்கிறது. நீர்நிலைகளை பாதுகாத்தல், பருவமழை பொழியும் போது அவைகளை கடலில் போய்க் கலக்க விடாமல், அணைகளில் தேக்கிப் பாதுகாத்தல்- பயன்படுத்தல், நதிகளை தேசிய மயமாக்கல், தாமிரபரணி உள்ளிட்ட வற்றாத ஜீவநதிகளை, பெரு முதலாளிகளின், தொழிற்சாலைக்கான 'கச்சா' ப்பொருளாய் மாற்றாதிருத்தல்... இவைகளை மட்டும் செய்தாலே போதுமானது.  2030- ஆண்டுகளில் தண்ணீர்த் தேவை என்பது 6,900 பில்லியன் கன மீட்டராக அதிகரிக்கும் என்பது ஐ.நா.வின் நீர்வள ஆதார மையத்தின் கணிப்பாக உள்ளது. பருவநிலை மாற்றம்,  நாளுக்குநாள் புவி வெப்பமயமாதல், பெருகி வரும் மக்கள் தொகை என்று நீர்ப்பற்றாக் குறைக்கான அடுத்தகட்ட காரணங்களும் வரிசையாய் நிற்கிறது.  


சென்னைக்கான தேவை என்று மட்டும் சுயநலமாகப் பார்த்தாலும் கூட சொல்லிக் கொள்ளும் அளவிற்கு நல்ல தகவல் இல்லை. சென்னைக்கு குடிநீர் வழங்கி வந்த வீராணம் ஏரி, முற்றிலும் வற்றியதால்,  சென்னைக்கான குடி நீர் விநியோகமும் பத்துநாள்களுக்கு முன்னரே நிறுத்தப்பட்டு விட்டது.  கடலூர் மாவட்டத்தில் உள்ள ஐம்பதாயிரம் ஏக்கர் பாசனம் போக, எஞ்சிய நீர் சென்னை மக்களின் தாகம் தீர்க்கப் பயன்பட்ட நிலை, இப்போது  இல்லை. ஏரியின் மொத்தக் கொள்ளளவான  47.50 அடியில்,  இப்போது  தண்ணீர் அளவு மூன்றடி மட்டும்தான் இருக்கிறது.  இதற்கு மேலும்  ஏரியிலிருந்து குடிநீர் அனுப்ப வேண்டுமென்றால், நீரோடு, ஏரிமணலும் கலந்துதான் வெளியேறும் என்பதே  உண்மை. வீராணம் நீர்வரத்து இப்படி ஆகிப் போனதால், பரவனாறில் இருந்து சென்னைக்கு நீர் கொண்டுவர, பொதுப்பணித் துறையினர் முயற்சிப்பதாகத் தெரிகிகிறது. மார்ச் மாதத்தின் முதல் வாரமே தண்ணீருக்காக கையேந்தக் கூடிய நிலைக்கு சென்னை மக்கள் தள்ளப் பட்டுள்ளனர். வீடுகளில் அமைக்கப் பட்டுள்ள குடிநீர்க் குழாய்களில் காற்றைத் தவிர, வேறேதும் இப்போது வருவதில்லை. ஆங்காங்கே நிற்கும்  'சின்டெக்ஸ்' நீர்த் தொட்டிகளை நிரப்பிச் செல்லும்  'மெட்ரோ வாட்டர்' லாரிகளின் வரவு மீண்டும் குறையத் தொடங்கியுள்ளது.  ஆட்சி- அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு இதுவரையில், வெளியில் தெரியும் அளவுக்கு விக்கலும் வரவில்லை. அப்படியே வந்தாலும் கைவசம் பாட்டிலில் 'அம்மாகுடிநீர்'   இருக்கிறது. பாட்டில்கள் தீரும் வரைதான் அதுவும். நிலமே வற்றிப்போன பின்னர், பாட்டில்களில் எதை நிரப்புவது ?


உலகில் மூன்றில் ஒருவருக்கு போதுமான தண்ணீர் இல்லை. ஐந்தில் ஒருவருக்கு சுகாதாரமான  குடிநீர் கிடைப்பதில்லை.  உணவு தானிய உற்பத்தி, விளைச்சல், விலை என்று அனைத்துமே தண்ணீரை முன்னிறுத்திதான் பயணிக்கிறது. உலகின் மொத்த பூமி பரப்பில் 2.4% இந்திய நில பரப்புதான். அதே வேளையில், உலகில் உள்ள 45 ஆயிரம் பெரிய அணைகளில், இந்தியாவுக்கான பெரிய அணைகள் 4,300 மட்டும்தான். இந்தியாவை விட கூடுதலாக  9 கோடி மக்கள் தொகையைக் கொண்ட (சீனா 130 கோடி) சீனாவில் 22 ஆயிரம் பெரிய அணைகள்  உள்ளன. 30 கோடி மக்கள் தொகையை மட்டுமே வைத்துள்ள அமெரிக்காவிலோ 6, 675  பெரிய அணைகள்  உள்ளன.
கடந்த ஆண்டு ஏப்ரலில், செய்தியாளர் சந்திப்பில் பேசிய தேசிய நதிகள் இணைப்பு நிபுணர் குழு உறுப்பினர் ஏ.சி.காமராஜ், " தமிழகத்தில் ஆண்டுதோறும் 177 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இதற்கு 'தமிழ்நாடு நவீன நீர்வழிச்சாலை திட்டம்' மூலம் முற்றுப்புள்ளி வைக்கலாம். நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்குச் சென்று விட்டது. கடலில் கலக்கும் பெரும்பகுதி நீரை குடிநீருக்கும், விவசாயத்திற்கும் இந்த திட்டம் மூலம் கொடுக்க முடியும். இந்தத் திட்டத்தால்,  தமிழகத்தில் 17 ஆறுகளை இணைத்து, எங்கு உபரி நீர் வந்தாலும் அதை எடுத்து தேவையான பகுதிக்கு, தேவையான நேரத்தில் கொடுக்கலாம்" என்று குறிப்பிட்டார். தண்ணீர்ப் பஞ்சத்தில் இருந்து மக்களை மீட்டெடுக்க, அடுத்த சந்ததியைக் காப்பாற்ற, நாட்டை முன்னேற்ற ஆலோசனை சொல்லும் அறிஞர்கள் இங்கே ஆயிரம் பேர் உண்டு... கேட்பதற்கும்  ஆட்சியதிகாரத்துக்கு, அறிஞர்கள் தேவைப்படுகிறார்கள்...


டிரெண்டிங் @ விகடன்