`ஆசையாக வளர்த்த ஒரே மகளை தீ விழுங்கிவிட்டதே' - அகிலாவின் பெற்றோர் கண்ணீர் #KuranganiForestFire

குரங்கணி மலையேற்றத்தில், காட்டுத்தீயில் சிக்கி கும்பகோணத்தைச் சேர்ந்த அகிலா என்ற இளம்பெண் உயிரிழந்தார். மகளின் இறப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் பெற்றோர் கதறி அழுதது நெஞ்சை உருக்கியது.

அகிலா

தேனி மாவட்டம், குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். இதில், கும்பகோணத்தைச் சேர்ந்த அகிலா என்ற இளம் பெண்ணும் ஒருவர். இதைக் கேள்விப்பட்ட அகிலாவின்  பெற்றோர், உறவினர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அகிலாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக, பொதுமக்களே கண்ணீர் அஞ்சலி ஃப்ளெக்ஸ் போர்டு வைத்து, தங்கள் வருத்தத்தைத் தெரிவித்துவருகின்றனர்.

கும்பகோணம் பகவத் விநாயகர் கோயில் பகுதியைச் சேர்ந்தவர், அகிலா. 24 வயதாகும் இவர், சென்னை டி.சி.எஸ்-ஸில் ஐடி ஊழியராகப் பணிபுரிந்துவருகிறார். இவர், தன்னுடன் பணிபுரிந்த தோழிகளோடு, தேனி குரங்கணி மலைப்பகுதிக்கு ட்ரெக்கிங் சென்றபோது ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டு அகிலா உயிரிழந்தார். இந்தத் தகவலை உறுதிசெய்த தேனி மாவட்ட காவல்துறை, அகிலாவின் பெற்றோர் கிருஷ்ணமூர்த்தி, சாந்தி ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். இந்தச் செய்தியைக் கேட்ட அவர்கள், "ஆசையாக வளர்த்த ஒரே மகளை தீ விழுங்கிவிட்டதே... இனி  நாங்கள் என்ன செய்வோம்" எனக் கதறி அழுதனர்.  அதைக் கண்ட அவர்களது உறவினர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் சோகத்தில் கண்ணீர்வடித்தது, மலை நெஞ்சையும் கலங்கச்செய்தது.

அகிலாவின் பெற்றோர் வயதானவரகள் என்பதால், அவரது உடலை வாங்குவதற்காக முக்கிய உறவினர்கள் தேனி சென்றுள்ள  நிலையில், பொதுமக்கள் அகிலா மறைவிற்கு இரங்கல் தெரிவித்து கண்ணீர் அஞ்சலி போர்டுகள் வைத்து ருகின்றனர். அகிலாவின் உறவினர்களிடம் பேசினோம். "அகிலா, இயற்கையை ரொம்பவும் நேசிக்கும் பெண். அவளுக்கு, மலை என்றால் மிகவும் பிடிக்கும். மலை பகுதிக்குச் செல்லும்போது, அங்குள்ள காட்சிகளைப் போட்டோ எடுத்து, மலைப்பகுதியை ஆய்வும் செய்வாள். சில மாதங்களுக்கு முன்கூட கொடைக்கானல் மலைப்பகுதிக்குச் சென்றுவந்த அகிலா, ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தாள். அதேபோல, குரங்கணி மலைப்பகுதிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு மகிழ்ச்சியாகச் சென்றவளுக்கு இப்படி ஆகும் என நாங்கள் கொஞ்சம்கூட நினைக்கவில்லை. மலையை நேசித்தவள், மலையின் மடியிலேயே உயிரிழந்ததுதான் பெரும் கொடுமை" என நா தழுதழுக்கக் கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!